விஷவாயு: விசாகப்பட்டினத்தில் நடந்தது என்ன?
விசாகப்பட்டினம்; ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இயங்கும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை கசிந்த விஷவாயுவை அடுத்து சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிறுவனத்தைச் சுற்றிலும் 20 கிராமங்கள் உள்ளன. வியாழக்கிழமை அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆலையில் இருந்து கசிந்தது – ஸ்டைரீன் என்ற வாயு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எளிதில் தீப்பற்றும் தன்மையுடைய இந்த வாயு கார் கதவுகள், குழாய்கள், கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு உடலில் 3 வழிகளில் ஊடுருவும் தன்மை கொண்டது. தோல் மீது பரவி பாதிப்பை உருவாக்குதல், சுவாசக் காற்று வழியாக மூச்சுத் திணறல், உணவுப் பொருள்களில் பரவி மனித உடலை பாதிக்கச் செய்யும்.
வாயு தாக்குதல் தொடங்கியதும் கண், மூக்கு, தோல் எரிச்சல் ஏற்படும். உடனடியாக மூச்சுக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது. மூளை, பின்புற தண்டுவடத்தை செயலிழக்கச் செய்யக் கூடியது. விரைவாக சுவாசத்தில் ஆக்சிஜனை வழங்கினால் இறப்பைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை உடனடியாகத் தொடர்புகொண்டு சுதந்திரமாக செயல்பட்டு நிலையை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த நேரம் அதிகாலை என்பதால் பெரும்பாலான மக்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் மீட்புப் பணி கடினமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்தில் பாதிப்பு:விஷவாயு கசிவு சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு பரவிய நிலையில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்போர்ருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சாலைகளில் நடந்து சென்றவர்கள் விஷவாயுவால் மயங்கி விழுந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில வியாழக்கிழமை மாலை வரை ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
You must log in to post a comment.