விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை.
விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களைக் கொடுக்காமல் – அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்ற மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள் சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு அங்கேயே முதல் உதவி செய்யாமல், இரத்தம் கொட்டட்டும்; தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம்; அதுவரை வலியைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போல இருக்கிறது.
முதல் உதவியைப் போன்றது, உடனடியாகக் கொடுக்கப்படும் நிவாரணப் பணம். ஏற்கெனவே வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல், பல நூறு கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தலையில் மீண்டும் கடன் என்ற பாறாங்கல்லை ஏற்றி வைப்பது எந்த வகை நிவாரணம்?
இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து – மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அவர்களைக் கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் மத்திய நிதியமைச்சர் முன்வரவில்லை?
பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டு துயரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சர் ஈடுபட வேண்டும்.
விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உள்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 நேரடி பண உதவி வழங்கியும் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டுப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.