ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்
அயோத்தி: அயோத்தியி்ல் ராமர் பிறந்ததாகக் கருதப்படும் ராமஜென்ம பூமியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் 270 அடி நீளமும், 160 அடி உயரமும் கொண்டதாக அமைகிறது.
நாடு முழுவதும் புனித தலங்களில் எடுத்துச் சென்ற மண், புனிதநீர், பக்தர்களால் அனுப்பப்பட்ட செங்கற்கள், ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள தூண்கள் உள்ளிட்டவை இந்து ஆன்மிக பக்தர்களின் நீண்டநாள் கனவை நனவாக்கக் காத்திருக்கின்றன.
ராமர் கோயில் 3 தளங்களைக் கொண்டதாக அமையவுள்ளதாகத் தெரிகிறது. கீழ்தளத்தில் 106 தூண்களும், முதல் தளத்தில் 106 தூண்களும், இரண்டாவது தளத்தில் 106 தூண்களும், கூடுதலாக 12 தூண்களும் கோயில் கட்டுமானப் பணிகளில் இடம்பெறுகின்றன. ராமரை வணங்க வருவோர் கருவறையைச் சுற்றி வரும் வகையில் பிராகாரமும் அமைக்கப்படுகிறது.
சுமார் 69 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட திருக்கோயில் வளாகத்தில் மூலவர் ராமர் கோயிலைச் சுற்றி லட்சுமணர், கணபதி, அனுமன், சீதைக்கு என தனித்தனி கோயில் சந்நிதிகளும் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பக்தர்கள் தியானம் செய்வதற்கு தியான மண்டபமும், இந்து மதம் தொடர்பான இலக்கியங்கள், நூல்கள் இடம்பெறும் மாபெரும் நூலகம், மிக பிரம்மாண்ட உணவு அருந்தும் கூடம், சமையல் கூடம், நிர்வாக அலுவலகங்கள், ஊழியர்களின் ஓய்வு அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறவுள்ளன.
இத்திருக்கோயில் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என கட்டட வடிவமைப்பாளரான சோம்புரா (77) தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.