மே 30 முதல் 100 பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதி:நிர்மலா சீதாராமன்

புதுதில்லி: மே 30 முதல் 100 பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா 5-ஆம் கட்ட அறிவிப்புகளை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு அவர் பேசியது:

7 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன. 6.81 கோடி பேர் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள், சோதனை கிட்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.08 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.


தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் 51 லட்சமும், என்.95 மாஸ்க்குகள் 87 லட்சமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
தொழில்புரிவதை எளிமையாக்குவதற்காக அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களை அரசு செய்ய உள்ளது.
சொத்துகள் பதிவு எளிமையாக்கப்படும். வர்த்தக சர்ச்சைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிக் கல்விக்கு…

பள்ளிக் கல்விக்காக மேலும் 12 சேனல்கள் தொடங்கப்படும். ஏற்கெனவே 3 சேனல்கள் உள்ளன. இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புதிய பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்வயம் பிரபா சேனல்கள் மூலம் இ-லேனிங் எனப்படும் மின்னணு கற்றல் ஊக்குவிக்கப்படும்.
பொது சுகாதாரத்துக்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
ஆன்லைன் கல்வி முறையை அணுகுவதற்கு உதவும் PMeVIDYA உடனடியாகத் தொடங்கப்படும். இ-வித்யா திட்டத்தின் கீழ் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும். பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் வழங்கப்படும்.

திவால் நடவடிக்கை நிறுத்தி வைப்பு:

கொரோனா காரணமாக புதிதாக திவால் நடவடிக்கைகள் எடுப்பது ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் தளர்வு செய்யப்படுகிறது.
கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கடன்கள் வாராக் கடனாக வரையறுக்கப்பட மாட்டாது.
சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நடத்தும் நிறுவனங்கள், ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு கடன் தொடர்பான அபராதங்கள் குறைக்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திவால் தீர்வு வழிமுறைகள் விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும். நிறுவனங்களின் 7 விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.

குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை? என்பதும், தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் எவை என்பது குறித்தும் அரசாணை வெளியிடப்படும் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.