மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறப்பு

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


சென்னை: மேட்டூர் அணை வரும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் காலத்தை கணக்கிட்டு ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்படும். பருவமழை தவறும் காலங்களில் தாமதமாக திறக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது.
இவ்வாண்டுக்கான தண்ணீர் திறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


ஆலோசனையை அடுத்து குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12 காலை 10 மணிக்கு திறக்கப்படும்.
தற்போது அணையில் 100.01 அடி தண்ணீரும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியும் உள்ளதால் தண்ணீர் திறக்கப்படுகிறது. 50 நாள்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவுக்கு அணையில் நீர் உள்ளது.
தண்ணீர் திறப்பு மூலம் இவ்வாண்டு 3.25 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்படும். அதன் மூலம் 5.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூலுக்கு வாய்ப்பு உள்ளது.

குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். பாசனக் கால்வாய்களை விரைவாக தூர்வார நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறுகிய கால நெல் விதைகளை இருப்பு வைத்து தேவையான அளவு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கிணற்று வசதியுள்ள விவசாயிகள் 12-ஆம் தேதிக்குள் நடவு பணிகளை முடிக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். நெல் விதைகள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.