மு.கருணாநிதி பிறந்த நாள்

இன்று

தமிழகத்தில் முதல்வராக 5 முறை இருந்த மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டப் பேரவைக்கு போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர் என்ற சாதனையைப் படைத்தவர்.
1957 முதல் 2016 வரை நடைபெற்ற 14 சட்டப் பேரவை தேர்தல்களில் 13 முறை போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.
அவர் கடைசியாக போட்டியிட்ட திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் மாநிலத்திலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


கருணாநிதி பன்முக ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தவர். தொடக்க காலத்திலேயே அரசியலிலும், திரைத் துறையிலும் ஆழமாக கால்பதித்தவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின்போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். அந்தத் பெயரை இன்றளவும் அவரது தொண்டர்களும், விசுவாசிகளும், ஆதரவாளர்களும் உயிர் மூச்சாய் உச்சரித்து வருகின்றனர்.
இந்திய அரசியலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர். அவருக்கு பல தலைமுறை அரசியல்வாதிகளை களத்தில் கண்ட பெருமையும் உண்டு.


தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் பல இருந்தாலும், கருணாநிதி ஆதரவாளர்கள், கருணாநிதி எதிர்ப்பாளர்கள் என்ற இரு பிரிவு மட்டுமே கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மையப் புள்ளியாக இருந்து வந்தது.
பேச்சாற்றல், எழுத்தாற்றலால் தமிழகத்தின் பெரும்பகுதி மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு சுண்டி இழுத்தவர். அவர் மீது அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைப்பவர்களும் கூட அவரது பன்முக ஆற்றலையும், சமுதாயத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டும் பெருமைக்குரியவர்.
தமிழகத்தில் கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அவர் தனது 94-ஆவது வயதில் 2018 ஆகஸ்ட் 7-இல் சென்னையில் காலமானார்.

பிற நிகழ்வுகள்

1539 – ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் கூட்டணிப் படைகள் வெர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கின.
1924 – 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்துவந்தவருமான மறைந்த மு.கருணாநிதியின் பிறந்த நாள்.
1931 – கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ பிறந்த நாள்.
1940 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.
1940 – பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.
1962 – பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் பலியாகினர்.
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வர்ட் வைட் 21 நிமிஷங்கள் விண்ணில் நடந்து சாதனைப் படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதல் அமெரிக்கர் ஆவார்.
1969 – தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய ராணுவத்தினர் புகுந்தனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க சீன ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1991 – ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் அனைவரும் ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் ஆவர்.
2006 – 2001-இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
2006 – மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.