மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்

தீரன் சின்னமலை 1780 ஏப்ரல் 17-இல் பிறந்தவர். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து போரிட்டவர்களில் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டியவர். கொங்கு நாடு அப்போது மைசூர் ஆட்சியில் இருந்தது. கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் எனக் கூறி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்கு சின்னமலை என பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப் படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை இருந்தார். 1782 டிசம்பர் 7-இல் ஐதர் அலியின் மறைவுக்கு பிறகு திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்தார். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியினரை எதிர்த்துக் கடும் போர் செய்தார்.  அப்போது மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

சின்னமலையின் கொங்குப் படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் போர்களில் திப்புவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. 1799 மே 4-இல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த நிலையில் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டி போருக்கு தயாரானார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர்கள் துணையுடன் பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. கொங்கு நாட்டுப் பாளையக்காரர்களை அவர் ஓரணியில் சேர்க்க முற்பட்டார். இடையறாத போர் வாழ்விலும் கூட பல கோயில்களுக்கு அவர் திருப்பணிகளைச் செய்தார். அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தப்பட்டோர், இஸ்லாமியர் பலரும் இருந்தனர்.

எப்படியாவது சின்னமலையை ஒழித்துவிட வேண்டும் என ஆங்கிலேயர் முடிவு எடுத்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி அடைந்தார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையில் இருந்து மிகப் பெரும் அளவில் பீரங்கிப் படை வந்தது சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து சங்ககிரி கோட்டைக்குக் கொண்டுச் சென்று போலி விசாரணை நடத்தினர். ஜூலை 31, 1805-இல் அவரை தூக்கிலிட்டனர். அவருன் சின்னமலையின் தம்பியரும், படைத் தலைவர் கருப்பசேர்வையும் தூக்கிலிடப்பட்டனர்.

பிற நிகழ்வுகள்

 781 – பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் நிகழ்ந்தது.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.
1588 – ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படை போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
1658 – அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.
1741 – புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.
1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
1865 – உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1938 – கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தன.
1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலியக் குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
1964 – சந்திரனின் முதலாவது மிக அருகாமையிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1971 – அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
1976 – வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.
1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
1988 – மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.
1992 – நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.