மாவட்டம்தோறும் வழக்குரைஞர் குழு: திமுக கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டம்தோறும் வழக்குரைஞர் குழு அமைப்பதென திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. திமுக அமைப்புச் செயல ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றுத் தர நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்குரைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
முதல்வர், அமைச்சர்கள் தூண்டுதலால் திமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதோடு, சட்டவிரோத கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இச்சூழலில் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாவட்டம்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை. திமுகவினர், தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யப்படுகின்றனர். கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே தொற்று அதிகரிக்க காரணம் என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொரு தொண்டரையும் காப்பாற்றிடும் பொருட்டு, திமுக நேரடியாகக் களம் காணும் மாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும் என்று இக்கூட்டம் எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.