மத்திய சுகாதாரத் துறை செயலர் ப்ரீத்தி சுதனுக்கு பதவி நீட்டிப்பு
முக்கிய அதிகாரிகள் மாற்றம்
புதுதில்லி: மத்திய சுகாதாரத் துறை செயலராக உள்ள ப்ரீத்தி சுதனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் வெற்றியும் கண்டுவருகிறது.
உலகில் அதிக மக்கள்தொகை நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவு என்றாலும், அது சமூக பரவலாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக செயல்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதாரத் துறை செயலர் ப்ரீத்தி சுதனுக்கு இம்மாதம் 30-ஆம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைகிறது. இச்சூழலில் மேலும் 3 மாதங்களுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக உத்தரவு தெரிவிக்கிறது.
மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்:
ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்து வந்த
ராஜேஷ் பூஷண்சுகாதார துறையில் செயலர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த தருண் பஜாஜ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராகிறார்.
ஊரக வளர்ச்சித்துறையின் புதிய செயலாளராக நாகேந்திரநாத் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்
ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்தில், எல்லை பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறையின் சிறப்பு செயலாளராக இருந்து வந்த பிரதீப்குமார் திரிபாதி, உருக்குத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தில்லி வளர்ச்சி குழுமத்தின் துணைத் தலைவர் தருண் கபூர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் உள்ள எம்.எம்.குட்டி வரும் 30-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால், கல்வி மற்றும் எழுத்தறிவு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
You must log in to post a comment.