மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

இணையதள நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்த பக்தர்கள்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் திங்கள்கிழமை சிறப்பாக நடந்தது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக்விஜயம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதையடுத்து திங்கள்கிழமை (இன்று) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. நாளை மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.