பெருமைக்குரிய வைகாசி விசாகம்


சென்னை: ஆன்மிக நாட்டமுடையோர் வைகாசி விசாக தினத்தில் அறுமுகம் கொண்ட ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடும் திருநாள்.
இத்தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுவோருக்கு அருளும், பொருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம். வைகாசி விசாகத்துக்கு மற்றொரு பெருமையும் உண்டு. எமதர்மன் அவதரித்த நாளும் இதுவே. இந்நாளில் எமனை வணங்கி பூஜை செய்வோருக்கு அனைத்து நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளை பெருவர் என்பதும் ஐதீகம்.
வைகாசியை வடமொழியில் வைஸாகம் என அழைக்கின்றனர். இம்மாதத்தை வைணவர்கள் மாதவ மாதம் என்று அழைப்பதுண்டு. சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது.


தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக இருப்பினும், அவை சிவனோடும் தொடர்புடையவை. முருகப் பெருமானுக்குரிய தனித்த விழாக்களில் ஐப்பசி சஷ்டியும், விசாகமும் முக்கியமானவை.
அசுரர்களின் கொடுமைகலைத் தாள முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டபோது, அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளைத் தோற்றிவித்தபோது, அவை சரவணப் பொய்கையில் விடப்பட்டதும், அவை வைகாசி விசாகம் அன்று ஆறு திருவுருவங்களாக மாறின. கார்த்திகைப் பெண்கள் மூலம் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். அரக்கர்களை அழித்து தேவர்களைக் காக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இந்நாளில் தானமும், தர்மமும் செய்வோருக்கு குலம் தழைக்கும், புத்திரபாக்கியம் உண்டாகும் என்பதும் ஐதீகம்.
இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நாளுக்கு வேறுசில சிறப்புகளும் உண்டு. வில் வித்தையில் தேர்ந்த அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபத ஆயுதத்தை வரமாகப் பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புதமான நாள்.

வடலூர் ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய நாள்.

வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவு கூர்மையும், உயர்ந்த புகழையும் எட்டக் கூடியவர்களாக விளங்குவர்.
சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான்.
கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு உள்ள சூழலில், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட வாய்ப்பில்லாவிடிலும், மாலையில் அவரவர் வீடுகளில் விளக்கேற்றி முருகனை வழிபடுங்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.