பூமிக்கு அருகே புதிய கருந்துளை கண்டுபிடிப்பு


நம்முடைய சூரிய மண்டலத்துக்கு மிக அருகே ஒரு புதிய கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இதுகுறித்த ஆராய்ச்சி அண்மையில் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக விளக்க கட்டுரை, அஸ்ட்ரானாமி அண்ட் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் என்னும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கருந்துளையுடன் தொடர்பில் உள்ள இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றுக்கு எச்ஆர் 6819 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு Be நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஒன்றை தேடும்போதே HR 6819 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர ஆய்வைத் தொடங்கினர். மிகவும் வேகமாகச் சுழலும் இந்த நட்சத்திரம், தன்னை சிதைவுறச் செய்து வருகிறது.
சிலியில் உள்ள லா சில்லா ஆய்வகத்தில் 2.2 மீட்டர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு நட்சத்திரங்களின் உட்புற பகுதியும் 40 நாள்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு தெரியாத பொருள் ஒன்றை சுற்றி வருவதையும் வெளிப்படுத்தின.
கருந்துளை எனக் கருதப்படும் அந்த பொருள் சூரியனைவிட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக நிறையை கொண்டிருக்கலாம்.
இதில் சிறப்பு அம்சம் என்னவெனில், இவ்வகை நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால், அதற்கு தெற்கு வானத்தை காணும் வாய்ப்பு நமக்கு இருக்க வேண்டும். அது மட்டும் இருந்துவிட்டால், தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் என எதுவும் தேவையில்லை. ஆனால், நட்சத்திர அமைப்பு சூரியனின் பின்னால் இருந்துதான் வெளிப்படுகிறது.
இதுவரை நமது பால்வழி அண்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கருந்துளைகளைதான் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை தனது அகந்திரள் வளிம வட்டுகளுடன் (Accretion Discs) வலுவான தொடர்பை கொண்டுள்ளன. ஆனால் புள்ளிவிவரங்களோ, பால்வழி அண்டத்தில் இன்னும் பல்வேறு கருந்துளைகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.
பால்வழி அண்டத்தில், சுமார் 100 மில்லியன் கருந்துளைகள் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. எனவே, பூமிக்கு மிக அருகில் இன்னும் எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம் என்கின்றனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள கருந்துளை சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது நம்மை பொறுத்தவரை மிகத் தொலைவாக தெரியக்கூடும். உண்மையில் பூமியுடன் ஒப்பிடும்போது அருகில் உள்ள கட்டடம் தூரம்தான் அதற்கு.
இதற்கு முன்பு வரை, இந்த உயர் ஆற்றல் வெளிப்பாட்டை கொண்ட தொலைநோக்கிகள் மூலமே கருந்துளைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து வந்தனர். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.