புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணத்துக்கு கட்டணம் வசூலிக்கவில்லை: ரயில்வே நிர்வாகம்


புதுதில்லி:புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் ரயில்களில் கட்டணம் வசூலிக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை அடுத்து மார்ச் 24 முதல் நாடளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு வருவதை அடுத்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஊர் திரும்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஒருசில ரயில்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரசே ஏற்கும் எனவும் சோனியா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. ரயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ரயிலிலும் பயணிகளுக்கு இடையே காலியான இருக்கைகள் உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது.
அவர்கள் பயணிப்பதற்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகமும், மாநில அரசுகளும் பகிர்ந்தளிக்கின்றன. ரயில்வேயின் மொத்த செலவில் 15 சதவீதம் மட்டும் மாநில அரசிடம் பெறப்படுகிறது. 85 சதவீத கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது.
மாநிலங்கள் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.