புரந்தரதாசரின் விடுகதையில் புதைந்துள்ள விடை!

வெ நாராயணமூர்த்தி

மூத்த பத்ரிகையாளர், ஆன்மிக நெறியாளர்

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சுமார் ஐந்து லட்சம் பக்தி சித்தாந்த பாடல்களை உருவாக்கி, அழியாப் புகழுடன் சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர் புரந்தர தாசர். மனித சரித்திரத்தில் இவ்வளவு பாடல்களை இதுவரை யாராவது புனைந்துள்ளார்களா என்பது சந்தேகமே. இவருடைய இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக். சிறந்த பக்த கவி. கவித்துவத்தோடு இசைத்துவமும் கொண்டவர். பாரம்பரிய கர்நாடக இசையின் தந்தை என்று பெருமை பெற்றவர். கர்நாடக மாநிலம் ஷிவமோக மாவட்டத்தில் க்ஷேமபுரம் என்கிற நகரத்தில் ஒரு பெரிய வைர வியாபாரியின் மகனாகப் பிறந்தார். மனைவி, மக்களுடன் செல்வம் கூட்டுவதே தன் லட்சியமாகக் கொண்டு தன் முதல் நாற்பது வருடங்களை கழித்தவர். மிகக் கருமி. திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, தன் மனைவி மக்களுடன் தம்பூரா சகிதமாக பக்திப் பாடல்களை வீடு வீடாக பாடிக்கொண்டு எளிய வாழ்க்கைக்கு மாறிவிட்டார். ஸ்ரீ மத்வாச்சாரியர் அருளிய த்வைத தத்துவத்தை, ஆன்மிக பக்தி சித்தாந்ததை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில், மிக எளிமையாக கன்னட மொழியில் ஹரி கீர்த்தனைகளாக எழுதி, இசையுடன் பரப்ப தன் எஞ்சி நின்ற வாழ்நாட்கள் முழுவதையும் செலவிட்டார். 1565 ஆம் ஆண்டு இவர் மறைந்தார்.

கருமியான ஒரு செல்வந்தன் பரம பக்தனாக, பக்தி வேதாந்தியாக, ஜனசேவகனாக மாறியது எப்படி? ஒரு நாள் ஸ்ரீநிவாச நாயக்கின் வீட்டுக்கு ஒரு வயோதிகன் வந்து பிச்சை கேட்டான். நாயக் கருமியாயிற்றே, பிச்சைக்காரனை விரட்டிவிட்டான். வயோதிகனோ விடவில்லை. வீட்டின் பின்புறம் சென்று நாயக்கின் மனைவி சரஸ்வதியிடம் வேண்டினான். இளகிய மனசு கொண்டவள் அவள் தான் அணிந்திருந்த மூக்குத்தியை கழற்றித் தந்து அதை விற்று பசியாறுமாறு சொல்லி அனுப்பினாள். வயோதிகனோ மூக்குத்தியை விற்க அந்த நகரத்திலேயே பிரபலமான ஸ்ரீநிவாச நாயக்கின் கடைக்கு சென்றான். மூக்குத்தியைப் பார்த்தும் அது தனது மனைவியினுடையது என்பதை ஒரு நொடியில் கண்டுபிடித்துவிட்டான். வேகமாக தான் வீட்டுக்குச் சென்று தன் மனைவிடம் அவளது மூக்குத்தி எங்கே என்று வினவினான். அவளோ தான் தானமிட்டுவிட்டதை மறைக்க அதை பெட்டியில் கழற்றி வைத்திருப்பதாக கூறினாள்.  கணவன் விடாப்பிடியாக அதைக் கொண்டுவரச் சொன்னான். உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று பயத்தில்  ஸ்ரீ நாராயணனை வேண்டிக்கொண்டு விஷத்தை அருந்த முடிவுசெய்து, நஞ்சுக் குப்பியைத் திறந்தபோது, என்ன ஆச்சர்யம், அதனுள் அவளது மூக்குத்தி இருந்தது. ஒரே மாதிரியான இரண்டு மூக்குத்திகளைக் கண்ட நாயக்கன் அனாவசியமாக தன் மனைவியை சந்தேகித்தை எண்ணி வெட்கித்தான். வயோதிகனைத் தேடியபோது அவனும் மறைந்துவிட்டான். வந்த வயோதிகன் சாட்சாத் விஷ்ணுவே என்று சொல்லத்தேவையில்லை. ஸ்ரீநிவாசனுக்குள் புதைந்திருந்த இசைக்கவியை தட்டி எழுப்பவே இந்த தெய்வீக நாடகம். இந்த நிகழ்ச்சி நாயக்கின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அஹம்பாவம் அழிந்தது. விஷ்ணுவின் பரம பக்தானாக, தாசனாக (சேவகனாக) மாறினான். இன்று அவருடைய புண்யதிதி (மறைந்த நாள்) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

புரந்தர தாசர் பக்தி ரசங்களோடு பல பாடல்களை புனைந்திருந்தாலும் இங்கே நாம் பார்க்கவிருக்கும் இந்த பாடல் அவர் எழுதிய பாடல்களிலேயே மிக ஆழமான கருத்து புதைந்தது. கொஞ்சம் கடினமானது. புதிரானது. பாடல் கன்னட மொழியில் இருப்பதால் அதன் சாராம்சத்தை தந்திருக்கிறேன்:

ஒரு முள்ளின் முனையில் மூன்று குளங்களைக் கட்டினானாம் ஒருவன். அதில் இரண்டு குளங்களில் நீரை நிரப்பமுடியாது. ஒன்றில் நீர் நிரம்பவில்லை. நீர் இல்லாத அந்த குளத்துக்கு மூன்று வேலை ஆட்கள் வந்தனர். அதில் இருவர் கால் உடைந்தர்வர்கள், ஒருவருக்கு காலே இல்லை. காலில்லாத ஆளுக்கு மூன்று எருமைகளைத் தந்தானாம். அதில் இரண்டு மலடு, கன்று பெற முடியாது, ஒன்றுக்கு கன்று பிறக்கவேவில்லை. கன்றில்லாத எருமைக்கு மூன்று ஆஸ்திகளை தந்தானாம். அதில் இரண்டு உபயோகம் இல்லாதது. ஒன்று உபயோகம் ஆகவில்லை. உபயோகமில்லாத ஆஸ்திக்கு மூன்று கண்காணிப்பாளர்கள் வந்தனறாம். அவர்களில் இருவர் குருடர்கள், ஒருவருக்கு கண்ணே இல்லை.

கண்ணில்லாதவருக்கு மூன்று ஊர்கள் கிடைத்ததாம். அதில் இரண்டு பாழாகியவை, ஒன்றில் யாருமே இல்லை. யாருமில்லாத ஊருக்கு மூன்று குயவர்கள் வந்தனராம். அவர்களில் இருவருக்கு கைகள் முடமாம், ஒருவருக்கு கைகளே இல்லையாம். கை இல்லாத குயவன் மூன்று பானைகளை செய்தானாம். அவற்றில் இரண்டு ஓட்டைகள் ஒன்றுக்கு அடிப்பாகமே இல்லை. அடிப்பாகம் இல்லாத பானையில் மூன்று அரிசிகள் இட்டு சமைத்தானாம். அதில் இரண்டு சமைக்க முடியாமல் போனது, ஒன்றை சமைக்கவே இல்லை.  சமைக்காத அரிசியை சாப்பிட மூன்று விருந்தாளிகள் வந்தனாராம் அதில் இருவர் சாப்பிடவில்லை, ஒருவருக்கு பசியே இல்லையாம். பசியில்லாத விருந்தாளிக்கு மூன்று துடைப்பம் கொடுத்தனாராம். அதில் இரண்டு தொடமுடியவில்லை  ஒன்று தொடவில்லை. தொடாத துடைப்பத்தைக் கொண்டு என்னை தொட்டு மோட்சத்தை  அளிக்க வரம் தா சர்வேஸா!

இந்தப் பாடல் ஒரு விடுகதையைப் போல தோன்றினாலும், இது நம்மைப் பற்றியது. பரமாத்மாவை அடைய ஜீவாத்மா என்ன செய்ய வேண்டும் என்ற பக்தி சித்தாந்தத்தை, த்வைத தத்வ அடிப்படையில் அழகாக படம் பிடித்துக் கட்டுகிறது.  நம்முடைய இயலாமையை, வாய்ப்புகள் இருந்தும் நம்மை உயர்த்திக் கொள்ள முயலாமையை, நம் வாழ்க்கையை வீணடடிக்கும் நிலையை, திருத்தும் வகையில், எச்சரிக்கும் வகையில் கவிதை நயத்துடன் புனையப்பட்டுள்ளது. நம் நிதர்சன நிலையைக் காட்டி,  நம்மைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை தந்துள்ளார் புரந்தர தாசர்.

ஒரு முள்ளின் முனையின் அளவுதான் ஜீவன். இந்த அளவு எல்லா உயிரனங்களுக்கும் பொருந்தும். மூன்று குளங்கள் என்பது நம்முடைய மூன்று சரீரங்களைக் குறிக்கிறது. நாம் பார்க்கக்கூடிய ஸ்தூல சரீரம். உள்ளே மறைந்திருக்கும் சூட்சும சரீரம் மற்றும் காரண சரீரம். இந்த மூன்று சரீரங்களையும் இயக்குகிறது இந்த ஜீவன். வேதங்களில் கர்மங்களை தண்ணீரோடு ஒப்பிடுவது காணப்படுகிறது. கர்ம வினைகளை தீர்ப்பதற்காக நம்மை படைத்தவன் நமக்கு இந்த சரீரங்களை தருகிறான். கர்மங்கள் தண்ணீர் என்றால் அதை பிடித்து வைக்க குளம் வேண்டாமா? அதனால்தான் சரீரத்தை குளம் என்கிறார் புரந்தரதாசர். இதில் சூட்சு சரீரத்திலும் காரண சரீரத்திலும் நீரை (கர்மங்களை) நிரப்பமுடியாது. ஸ்தூல சரீரத்தில் மட்டுமே இதை நிரப்பமுடியும். ஆனால் சரியான முயற்சியும் முனைப்பும் இல்லாதாதால் கர்ம வினைகளை நம்மால் தீர்க்கமுடியாமல், நல்ல கர்மங்களையும் நிரப்பமுடியாமல் போகிறது. வாய்ப்பு இருந்தும் பயனில்லை.

நிரம்ப முடியாத குளத்துக்கு மூன்று வேலையாட்கள் வந்தனர். யார் அவர்கள்? குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம். இதில் இருவர் கால் உடைந்தவர்கள். இவர்கள் மற்றவர்கள் உதவியில்லாமல் நடமாடமுடியாது. இந்த இரண்டு பருவங்களிலும் கர்ம வினைகளை  எதிர்கொண்டு அவைகளை தீர்த்துக்கொள்வது என்பது இயலாத காரியம். வாலிபப் பருவம் ஒன்றே இதற்கு ஏற்றது. ஆனால் பெரும்பாலோர் இதை உணராமல், தங்கள் வாழ்க்கையை சுகபோகத்தில் கழித்து மேலும் தீய கர்மங்களை சேர்த்துக் கொள்கிறார்கள். செயல்பட  கால் (வாய்ப்பு) இருந்தும் அவர்களால் பயன்படுத்த முடியாதால் அந்தக் கால் இல்லாததற்குச் சமம்.

இந்தக் கால் இல்லாதவனுக்கு மூன்று எருமைகளைத் தந்தானாம் படைத்தவன். அவை மூன்று ஆஸ்திகள்- மனைவி, மக்கள் மற்றும் செல்வம். இவைகளை எருமை என்று சொல்வது ஏனென்றால், எருமை சொரணையின்றி, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன் தேவைகளை அதிகப் படுத்திக்கொண்டே போகும் . மனைவியும் மக்களும் தங்கள் தேவைகளிலியே குறியாக இருப்பார்களே தவிர, தர்ம காரியங்கள் செய்து கர்ம வினைகளைப் போக்கிக் கொள்வதற்கு இவர்கள் பெரும் தடைகள். ஆகையால் அவர்களால் பயன் இல்லை (மலடு). செல்வத்தை மட்டுமே தர்ம கார்யங்களுக்கு பயன்படுத்தமுடியும். ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லையே. அதனால் செல்வம் இருந்தும் பயனைளிக்காமல் போகிறது.

இந்த உபயோகமில்லாத ஆஸ்தியைக் கண்காணிப்பதற்கு மூன்று பேர் வந்தனராம். அதில் இருவர்கள் குருடர்கள், ஒருவருக்கு கண்ணே இல்லை. இதில் சொல்லப் படுவது மூன்று வகையான கர்மங்கள். ஒன்று நடந்து முடிந்தது, இன்னொன்று நடக்கபோவது. இவை இரண்டும் நமக்கு தெரிவதில்லை. ஆனால் நம்மால் செய்யக் கூடியவை நமக்கு தெரியும். ஆனாலும் இதைப் பற்றிக் கவலைப் படாமல், கண்மூடித்தனமாக நம் வாழ்க்கையை சுக போகத்தில் கழித்து மேலும் வேண்டாத கர்ம வினைகளை சேர்த்துக் கொள்கிறோம்.

அப்படிபட்ட கண்ணிலாதவருக்கு மூன்று ஊர்களைத் தந்தானாம் படைத்தவன். இதில் இரண்டு ஊர்கள் பாழாய் போனவை, ஒன்றில் யாரும் குடியிருக்கவில்லை. இங்கே மூன்று ஊர்கள் மூன்று குணங்களைக் குறிக்கின்றன. சத்வம் (பவித்ரம், திருப்தி, ஆனந்தம், நல்ல எண்ணங்கள், தீர்க்கம் போன்றவை), ரஜஸ் (அவசர புத்தி, எப்போதும் தேவைகளை நாடுவது, அனைத்திலும் ஈடுபடுவது) மற்றும் தமஸ் (சோம்பேறி, தவறான எண்ணங்கள், குழப்பம், தவறான முடிவுகள்). ரஜஸ மற்றும் தமஸ குணங்கள் நமக்கு மோட்ச வழியைக் காட்டுபவை அல்ல. சாத்வ குணம் ஒன்றே நமக்கு உதவும் ஆனாலும் இதை உணராததால் இதுவும் லாயக்கில்லாமல் போனது.

குடியிருக்க முடியாத ஊருக்கு மூன்று குயவர்கள் வந்தனராம். அதில் இருவர் முடவர்கள், ஒருவருக்கு கையே இல்லை. ப்ரம்மா, விஷ்ணு, ஈஸ்வரனையே மூன்று குயவர்கள் என்கிறார் புரந்தரதாசர். இதில் ப்ரமனும் ஈஸ்வரனும் சாதாரணமாக அருளுவதில்லை (அதனால் முடவர்கள்). விஷ்ணு ஒருவரால் மட்டுமே அருளமுடியும். அவர் அபயக் கரம் நீட்டாதால் நாம் இந்தக் கஷ்டங்களை அனுபவிக்கிறோம்.

கை இல்லாத குயவன் மூன்று குடங்களைச் செய்கிறான். இரண்டு ஓட்டை, ஒன்றுக்கு அடிப்பாகமே இல்லை. இங்கே குடங்கள் என்பது விவேகம், வைராக்யம் மற்றும் பக்தி. விவேகமும், வைராக்யமும் இல்லாததால் நாம் நிலை தடுமாறி நம் இயல்பான நிலையை உணரமுடியாமல் தவிக்கிறோம். பக்தி ஒன்றுதான் நம்மைக் கரை சேர்க்கும். ஆனாலும் விவேகமும், வைராக்யமும் சேராமல் அடிப்பாகம் இல்லாத குடத்தைப் போல பக்தி நமக்கு பயன் இல்லாமல் போகிறது.

அடிப்பாகம் இல்லாத குடத்தில் மூன்று அரிசிகளை சமைத்தானாம். அதில் இரண்டு அரிசி வேகாதது, ஒன்று வேகவே இல்லை. பக்தியில் மூன்று வகைகள் உள்ளது. சாத்வீக பக்தி, ரஜச பக்தி, தமசபக்தி. ரஜச பக்தியும், தமசபக்தியும், வெறும் ஆடம்பரமும் ஆர்பாட்டமும் நிறைந்தது. இவை மோட்சம் தராதது. சாத்வீக பக்தி ஒன்றுதான் பயன்படும். ஆனால் வாய்ப்பிருந்தும்  நாம் சரியாக ஈடுபடுவதில்லை. (அதனால் இந்த அரிசி வேகவே இல்லை).

வேகாத இந்த அரிசியை சாப்பிட மூன்று உறவினர்கள் வந்தனர். இருவரால் சாப்பிட முடியவில்லை, ஒருவருக்கு பசி இல்லை. சாத்வீக பக்தியை மூன்று வகையாக பார்க்கலாம். எண்ணம், வார்த்தை, கார்யம். இது மூன்றும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே மோட்சத்தை அடைய வழி செய்யும். இந்த உடல் அழியும் போது வார்த்தையும் காரியங்களும் மோட்சத்தை அடையாது. ஆனால் எண்ணம் (சித்) ஒன்றே மோட்சம் அடையும்.

பசியில்லாத உறவினனுக்கு மூன்று துடைப்பங்களைத் தந்தார்களாம். இங்கே துடைப்பங்கள் என்று சொல்வது சுத்தம் செய்யும் கருவிகள். இவைகளில் இரண்டு தள்ளி நிற்கின்றன. ஒன்று நம் மேல் படவே இல்லை. பழைய பிறவியில் சந்தித்த சோகங்கள் துக்கங்களையும், எதிர்காலத்தில் வர இருக்கும் சங்கடங்கள் பற்றிய வலியையும் நம்மால் உணரமுடியாது. அதனால் இந்த இரண்டு வலியையும் நாம் தொடுவதில்லை. அவைகளைச் சுத்தபடுத்திக்கொள்ளவும் முடிவதில்லை. ஆனால் இந்த பிறவியில் நாம் சந்திக்கும் வலிகளையும் உணரமுடியாதவண்ணம் சுகங்களிலும் போகத்திலும் கழிக்கிறோம். ஆகவே, படாத துடைப்பத்தை என்மேல் படவைத்து, என்னை சுத்தப் படுத்தி, ஞானத்தையும், விவேகத்தையும், வைரக்யாத்தையும், தர்ம சிந்தனையும் தந்து, எனக்கு மோட்சத்தை அருள வழி செய் விட்டலா என்று முடிக்கிறார் தாசர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.