பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து
சென்னை: பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்குகளை தமிழ்நாடு அரசு சார்பில் சென்னைநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்குகளில் பேட்டி, செய்தி கொடுக்கும் அரசியல் கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடரும் போது, பத்திரிக்கை நிறுவனங்கள், செய்தி ஆசிரியர்கள், கட்டுரை ஆசிரியர்கள், செய்தியாளர்களை சேர்த்தும் அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்குகளில் வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
பத்திரிக்கையாளர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள், நக்கீரன், முரசொலி, தினமலர் ஆகிய தமிழ் செய்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பத்திரிகை, ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
You must log in to post a comment.