நிசார்கா புயல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


மும்பை: தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசார்கா’ புயல் புதன்கிழமை பகலில் கடக்கவிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பிற்பகலில் புயல் கரையைக் கடப்பதை அடுத்து மகாராஷ்டிரம், குஜராத், டையு, டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி உள்ளிட்ட பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
நிசார்கா தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்பதால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள், மருத்துவ உதவிக்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை மற்றும் அணு உலைகள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கனமழை, மரங்கள் விழுவதால் ஏற்படும் போக்குவரத்துத் தடையை சீர்செய்ய தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வானிலை மையம் ஆகியன ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.