நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; தளர்வுகள் என்னென்ன?
புதுதில்லி: நாடு முழுவதும் மே 31 வரையிலான ஊரடங்கு அறிவிப்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தற்போது 4-ஆவது தடவையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 3-ஆவது அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 4-ஆவது முறை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் உள்துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி, திருமண விழாக்களில் இதுவரை 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருநத்து. தற்போது 50 பேர் வரை பங்கேற்கலாம். இவற்றில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.
மாநிலங்கள் இடையேயான பேருந்து போக்குவரத்து குறித்து தொடர்புடைய மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு தடை நீடிக்கிறது. ஆம்புலன்ஸ் விமான சேவை, உள்துறை அமைச்சக நோக்கங்களுக்கான, பாதுகாப்பு காரணங்களுக்கான விமான சேவை அனுமதிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவைக்கான தடை நீடிக்கிறது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆன்லைன், தொலைதூர கல்வி முறையை தொடர அனுமதிக்கப்படுகிறது.
ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் தொடர்கிறது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், கூட்ட அரங்குகளுக்கு தடை தொடர்கிறது. சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மத நிகழ்ச்சிகளில் கூடுவதற்கான தடையும் நீடிக்கிறது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதிக்கலாம். பொது இடங்களில், பணியிடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் பங்கேற்கலாம்.
You must log in to post a comment.