நகரப் பகுதிகளில் இன்று முடித் திருத்தும் நிலையங்கள் திறப்பு


சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர பிற நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) முடித் திருத்தும் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து ஏறக்குறைய இரு மாதங்கள் மூடப்பட்டிருந்த நகர்புற முடித்திருத்தும் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுகின்றன.
4-ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஒருசில தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு அறிவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராமப்புறங்களில் முடித் திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்புக்கான உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நகர்ப்புறங்களிலும் கடைகளைத் திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையைத் தவிர பிற நகர்ப்புறங்களில் முடித் திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இவை காலை 7 முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். குளிர்சாதன வசதியை முடித் திருத்தும் நிலையங்களும், அழகு நிலையங்களும் பயன்படுத்தக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினியை அவ்வப்போது கடையில் தெளிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது. யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.