தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்-மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளதையும், தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் மத்திய பாஜக அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.


தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் உச்சமாக, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைக்கால நீக்கம் செய்யப்படுகிறது என்று உத்தரப் பிரதேச அரசும், 8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது என மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகளும் அறிவித்திருப்பது ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.


ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு திறக்கப்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்காக என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு வெளியிட்டு வருகிறார். ஆனால், அதற்கு நேர்மாறாக தொழிற்சாலைகள் எவ்வித தொழிலாளர் நலச் சட்டங்களையும் மதிக்கத் தேவையில்லை என்று பாஜக மாநில முதல்வர்கள் உத்தரவு போடுகிறார்கள்.


தொழிலாளர்களின் உரிமைகளும் பணிப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் கண்மூடித்தனமாகப் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியாது.
கொரோனா நோய்த் தொற்றினால் சோதனை மிகுந்து துன்பங்கள் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தொழிலாளர்களின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச்செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
எந்த ஒரு தொழிலாளர் சட்டத்தையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கக் கூடாது என்று தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் என்ற முறையில் பிரதமர் உடனே தலையிட்டு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சிறப்பு அறிவுரையை உடனடியாக, வெளிப்படையாக அறிவித்திட வேண்டும் எனக் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.