தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதையடுத்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், பணம் செலுத்தி மது வாங்குபவர்களுக்கு 750 மி.லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டில் ஒருவருக்கு வழங்க வேண்டும். மின்னணு முறையில் பணம் செலுத்துவர்களுக்கு 2 முழு பாட்டில் என மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும், வயது வாரியாக விற்பனை செய்யப்படும் என்ற நிபந்தனை மற்றும் மொத்த விற்பனையை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்நிலையில் 43 நாள்கள் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் தனிமனித இடைவெளி, பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது.
உயர்நீதிமன்ற நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா, வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ள போது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்திருந்தார். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து குன்றத்தூரைச் சேர்ந்த திலீபன் உள்ளிட்ட சிலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, சமூக விலகலை பின்பற்ற மதுபானங்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டனர்.
மேலும், ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.