தங்கக் கூண்டு

-ஆர்.ராமலிங்கம்

அவள் நினைத்த வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டது. பெற்றோருடன் நடத்திய நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் அவள் தான் விரும்பியவனை கரம் பிடித்தாள். அவனோடு பழகிய நாள்களில், அவனது குடும்பமும், உறவுகளும் இனிமையானவர்களாகவே தென்பட்டனர்.

திருமணத்தை அடுத்து பெற்றோரை பிரியும் தருணமும் வந்தது. பெண்ணாய் பிறந்துவிட்டால், தாய் வீடு நிரந்தரமல்ல என்பதை அவள் அறிவாள். இருந்தாலும், எல்லா பெண்களையும் போலவே, சீராட்டி, பாராட்டி வளர்த்த பெற்றோரையும், அவள் அன்னநடை பயின்ற வீட்டையும் விட்டு பிரிவதில் ஏனோ இனம்புரியாத ஒரு தயக்கம் இருந்தது.

கணவனின் கைவிரல்கள், அவளது விரல்களை சிறைபிடித்து வைத்திருந்ததை அடுத்து, மெல்ல அவனிடமிருந்து விடுபட்டு, தான் இதுவரை வசித்த வாழ்விடத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்க விரும்பினாள்.  முற்றிலும் ஒரு புதிய சூழலுக்கு செல்வதால் ஏற்பட்ட பதற்றம் அவள் உள்ளத்தில் குடியேறியிருந்தது. அவளது அகன்ற விழிகளின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் லேசாக ததும்பியிருந்தது.

யாரும் அறியாமல், புடவை தலைப்பால், விழியோரத்தில் வழியக் காத்திருந்த கண்ணீரை மெல்ல ஒற்றிக் கொண்டே, வீட்டின் கொல்லைப் புறத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

மழலையாய் தவழ்ந்து, வளர்ந்து, அந்த வீட்டை வலம் வந்த நாள்கள் அவள் நினைவுக்கு வந்து சென்றன. பள்ளி, கல்லூரி நாள்களில், அவளது சக தோழிகள் வீட்டின் கொல்லைப்புறத்தைச் சுற்றி வட்டமடித்து குதூகலித்த நாள்களும் நினைவுக்கு வந்தன.

தான் படித்த படிப்புக்காக கிடைத்த வேலையை ஏற்ற பிறகு அலுவலகத் தோழிகள் இந்த வீட்டுக்கு வந்துச் சென்ற நிகழ்வுகளும் அவள் கண் முன் நிழலாடின. பல சிந்தனைகளோடு கொல்லைப்புறத்தை சுற்றி வந்த அவள், தன்னை அறியாமல் பூசணிக் கொடியில் பெரிதாக பூத்திருந்த மஞ்சள் நிற பூவை பறித்தாள். ஏன் அதை பறித்தோம் என்ற எண்ணம், அவள் கையில் அந்த பூ உறுத்தியபோதுதான் எழுந்தது.

வீட்டின் பக்கவாட்டு சுவற்றையொட்டி நடந்து சென்றபோது, வீட்டு வாயில் புறத்திலிருந்து ‘காவ்யா’ என்ற வழக்கமான அதட்டல் அழைப்பு அவளது சிந்தனையைக் கலைத்தது.

ஆசை ஆசையாய் அவள் வளர்த்து வந்த சிவப்பு வளைய கிளியின் அந்த அழைப்பை அவளால் தட்ட முடியவில்லை. அருகே சென்ற அவளைக் கண்டதும், கூண்டில் உள்ள மரச்சட்டத்தில் அமர்ந்திருந்த பச்சை கிளி, சிறகடித்து மீண்டும் ‘காவ்யா’ என்று அழைத்தது.

ஒரு நேரத்தில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த அது, கடந்த 20 ஆண்டுகளாக அந்த கூண்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறது. இந்த வீட்டுக்குள் வந்த பிறகு, அவளிடம்தான் பாசத்தோடு, எப்போதும் தனது உரிமையை நிலைநாட்டி வருகிறது.

அந்த வீட்டில், கூண்டுக்குள் இருந்து சில நேரங்களில் விடுவித்து, சுதந்திரமாக  வீட்டுக்குள் உலாவரும் வாய்ப்பு கிடைப்பது காவ்யாவால் மட்டுமே என்பதாலும் கூட அந்த பாசம் இருக்கலாம்.

என்ன லிட்டில்…. வெளிய வருனுமா… என்றபடியே கூண்டின் கதவை திறந்த அவளது வலது புறங்கையில் ஒய்யாரமாய் அமர்ந்து,. அவளது ஆள்காட்டி விரலை இறுக்கமாக கால்களால் பற்றிக் கொண்டு மீண்டும் ‘காவ்யா’ என கிறீச்சிட்டது.

அவள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது, மாலை நேரத்தில் ஒருநாள் புத்தக மூட்டையை முதுகில் சுமந்தவாறு வீட்டை நோக்கி மெல்ல நடைபோட்டு வந்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்த கிளி. ஏதோ காரணத்தால் காலில் அடிபட்டு சாலையோரத்தில் விழுந்து பறப்பதற்கு துடித்துக் கொண்டிருந்த அதை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு நகர அவளால் முடியவில்லை.

சாதுர்யமாக அதை மீட்டு வீட்டுக்கு தூக்கி வந்து, அப்பா, அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சைக்குப் பின் கூண்டுக் கிளியாய் மாற்றினாள் காவ்யா.

லிட்டில்… என்ன பாக்குற… நான் வேற வீட்டுக்கு போகப் போறேன்… அப்புறம் யார் உன்ன.. இப்படி தூக்கி வச்சுப்பாங்க… என்று தழுதழுத்த குரலில் அவள் கூறியதை லிட்டிலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என்ன சொல்கிறாள் என்று புரியாமல், லேசாக தலைசாய்த்து அவளை உற்று பார்த்தது. அவள் அதன் சிவப்பான அலகு அருகே வாயை வைத்து முத்தமிட, அவளது உதடுகளை மெல்ல கவ்வி விட்டு, ‘காவ்யா’.. ‘காவ்யா’.. என்று மீண்டும் கிரீச்சிட்டது.

தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாறன், மெல்ல அவளை நெருங்கினான். லிட்டில் அச்சத்தில் சிறகடித்து கீ.. கீ.. கீ.. என 3 முறை ஒலியெழுப்பியதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என்னாச்சு… என்று கேட்ட அவனிடம், “கிளி உங்கள கண்டு பயப்படுதுங்க… அது எங்கிட்ட பேசிக்கிட்டிருந்தாலும், திரும்பி பாக்காமலேயே, பின்னால வரவங்கல அது பாக்க முடியும்… தெரியுமா” என்றாள் அவள்.

அப்படியா… என்ற அவனிடம், கிளி புராணத்தை பேசத் தொடங்கிய அவள்,  அது தன்னிடம் பாசமாக இருப்பது, வீட்டில் அதற்கு தரும் உணவு வகைகள், பராமரிப்பு அம்சங்கள், தான் அதற்கு சொல்லித் தந்த வார்த்தை பயிற்சி என அடுக்கிக் கொண்டே போனாள் காவ்யா.

ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த அவன், தன்னுடைய தமிழ் புலமையை அவளிடம் காட்ட, கிளிக்கு வேறு பெயர்களும் உண்டு தெரியுமா என்றான். அவள் உதட்டை பிதுக்கிய வேகத்தில், அஞ்சுகம், தத்தை, கிள்ளை, வன்னி என்று புறநானூற்று காலம் தொட்ட பெயர்கள் அதற்கு உண்டு என்றான் மாறன்.

கிளியோட ஆயுள் எத்தன வருஷம் தெரியுமா? என்ற எதிர்கேள்வியை அவள் எழுப்ப, அது நம்மல மாதிரி 80 முதல் 85 வருஷம் வாழும் என்றான்.

‘காவ்யா’…. நல்ல நேரத்துல ஊருக்கு கிளம்பனும்.. மாப்பிள்ளையை அழைச்சுகிட்டு சுவாமி அறைக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ… என்ற அம்மாவின் குரல் இவர்களின் பேச்சுக்கு தடை வைத்தது.

ஓராண்டு உருண்டோடி விட்டது. தலை தீபாவளி, தலை பொங்கல் என தாய் வீட்டுக்கு மூன்று முறை வந்து சென்றதோடு சரி. இந்த ஓராண்டில், அவள் ரொம்பவே மாறியிருந்தாள்.  கணவனின் கரம் பிடித்த சில நாள்களில் வேலையை அவள் விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலைக்கு செல்லும் உரிமையை தக்க வைக்க முயற்சித்தபோது, கணவனின் குடும்பத்தினர் வாயில் இருந்து சிதறிய வார்த்தைகள் வெகுவாக அவளை பாதிக்கச் செய்தது. ஏதோ அடிபட்ட பறவைபோல் துடித்த அவள் பெட்டிப் பாம்பாய் அடங்கினாள்.

அதிகாலை எழுவது, வீட்டு வேலையை நாத்தனார், மாமியாருடன் பங்கிட்டு செய்வது, கணவரை தயார்படுத்தி அலுவலகத்துக்கு அனுப்புவது, மாமியார் பார்க்கும் தொலைக்காட்சி சேனலை தானும் அமர்ந்து வேண்டா வெறுப்பாக பார்ப்பது, மாமியார் சிரித்தால் தானும் சிரிப்பது, பணி முடித்து இரவில் வீடு திரும்பும் மாறனுக்கு உணவு பரிமாறுவது, உறங்க படுக்கை அறைக்குச் செல்லும்போது ஏதோ சில சிக்கல் இல்லாத வார்த்தைகளை அவனுடன் பகிர்ந்துகொள்வதுதான் அவளது அன்றாடப் பணியாக மாறிவிட்டிருந்தது.

அம்மா அவ்வப்போது தொலைபேசியில் பேசும்போதுகூட, எச்சரிக்கையாக ஓரிரு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, தொடர்பை துண்டிப்பதும் உண்டு. . இதனால் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டோமோ என்ற உறுத்தல் அவளது மனதில் குடியேறியது..

ஒரு நாள் அம்மா பேசும்போது, லிட்டில்… இப்போதெல்லாம் சரியா சாப்பிடுருதில்ல… நானோ, அப்பாவோ கூண்டை திறந்து வைத்து கூப்பிட்டாலும், வெளியே வர்ரதுல்லடி… என்று சொன்னபோது காவ்யாவின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத படபடப்பு ஏற்பட்டதை உணர்ந்தாள்.

இரவு படுக்கைக்கு சென்றபோது மெல்ல மாறனிடம், ஏங்க… ரொம்ப நாளாச்சு, அம்மா, அப்பாவை பாத்துட்டு வரணும்போல இருக்கு… அத்தைகிட்டே கேட்க பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க.. என்றாள் காவ்யா.

“ஆகட்டும் பார்க்கலாம்” என்ற மாறன், மறுநாள் அலுவலகத்திற்கு புறப்படும் முன் அம்மாவிடம் ஒரு பொய்யை சொன்னான். “காவ்யா வயிற்று வலியாக இருப்பதாகச் சொன்னாள். கல்யாணத்துக்கு முன்பு அவள் சிகிச்சை பெற்ற டாக்டரிடம் ஒருமுறை சென்று பார்த்து வரவேண்டும் என்றாள்” என்று பட்டும், படாமலும் சொன்னான்.

போய் வரட்டுமே… என்ற மாமியாரின் வார்த்தை, அவளது காதுகளில் தேனாக பாய்ந்தது. மறுநாளே தாய்வீடு வந்து சேர்ந்தாள் காவ்யா.

வந்ததும், வராததுமா… லிட்டிலின் கூண்டை திறந்த அவளை, அதே அதிகார தோரணையோடு “காவ்யா.. காவ்யா..” என  உரிமையோடு அழைத்து கரங்களில் அமர்ந்ததும், அவளை அறியாமல் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது.

நீண்ட நாள் கழித்து கிளியின் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த அம்மாவுக்கு, மகளின் திடீர் வரவு ஆச்சரியத்தை அளித்தது. “என்னடி… மாப்பிள்ளை வரலையா..” என்றபடியே அவளை நெருங்கினாள். “இல்லம்மா… அவருக்கு அலுவலகத்தில் வேலை இருக்கு… என்னை பஸ் ஏத்தி விட்டார்” என்றாள் காவ்யா.

அரைமணி நேரத்தில் ஆறு மாத விஷயங்களை தாயும், மகளும் பகிர்ந்து முடித்தபோது, வீட்டுக்குள் நுழைந்த அப்பா, மகளை வரவேற்ற கையோடு, “மாப்பிள்ளை எப்படியிருக்கார்” என்று விசாரித்தார்.

சமையலறையில் மகளுக்கு பிடித்த உருளைக் கிழங்கு கறியை செய்தபடியே, “என்னடி சந்தோசமா இருக்கியா… மாப்பிள்ள நல்லா பாத்துக்குறாரா” என்று ரகசியமாகக் கேட்டாள் அம்மா.

“நல்லா பாத்துக்கிறாரும்மா…” உன்னையும், அப்பாவையும், லிட்டிலையும் பாக்கனும்போல இருந்தது அதான் புறப்பட்டு வந்துட்டேன் என்றாள் காவ்யா..

“நீ இல்லாததால லிட்டில் கூண்ட விட்டு வெளிய வர மாட்டங்குது… சத்தம் கூட போட மாட்டங்குதுடி.. உன்ன பாத்தப் பிறகுதான் அதுக்கு உயிரே வந்திருக்கு.”. என்றாள் அம்மா.

“ஏண்டி… சொன்னா கோவிச்சிக்க மாட்டியே… நாங்க அத வச்சு பாத்துக்க முடியலன்னு மட்டும் நினைக்காத… பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்தவங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தபோது, அவங்க சொன்னாங்க… – சுதந்திரமா இருந்த பறவைய.. இப்படி கூண்டுல அடைச்சு அதோட சந்தோஷத்தை பறிச்சிட்டீங்களே… நமக்கு எதுக்கு அந்த பாவம்… அதை வெளில விட்டுடுங்க.. எங்காவது சுதந்திரமா பறந்து போகட்டும்…ன்னு – சொன்னாங்க” என்றாள்.

என்னம்மா… சொல்ற, 20 வருஷமா நம்மகிட்டய இருந்த அதை எப்படிம்மா வெளியில விட்டுட முடியும். அப்படியே வெளியில போனாலும் அது பாதுகாப்பா இருக்குமா, சந்தோஷமா இருக்குமான்னு தெரியலையே. தானா இரை தேட கூட கஷ்டப்படுமேம்மா… என்று நீட்டி முழக்கினாள் காவ்யா.

இருந்தாலும், மனதை திடப்படுத்திக் கொண்டு அம்மாவின் யோசனையை அவள் ஏற்றாள். ஒரு சுதந்திரப் பறவையை இவ்வளவு நாள் கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி விட்டோமோ.. என்ற உறுத்தல் முதன்முறையாக அவளிடம் எழுந்தது.

சரிம்மா.. நீ சொன்ன மாதிரி அத வெளியில விட்டு பாக்கலாமே.. என்று காவ்யா சொன்னதும் அம்மாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். எதையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாத காவ்யா, இந்த ஓராண்டில் கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறாள் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

லிட்டிலை பிரிய மனமில்லாவிட்டாலும், அதன் சந்தோஷம்தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த அவள், கூண்டின் அருகே சென்றாள். கூண்டை திறந்ததும், முந்தைய உற்சாகத்தோடு சிறகடித்து காவ்யா.. என இருமுறை சத்தமிட்டு அவளை தஞ்சமடைந்தது.

“நீ இனியும் சிறைப்பட்டு கிடக்க வேண்டாம். அது எவ்வளவு கொடுமை என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது. எங்காவது பறந்துபோய் சந்தோஷமா இரு” என்றபடியே, வீட்டின் எதிரேயுள்ள அரசமரத்தடிக்கு நடந்து சென்றாள்.

அவளது விரல்களை இறுக்கமாக பிடித்திருந்த லிட்டில், எந்த சலனமும் இன்றி அவளை பார்த்தபடியே இருந்தது. அருகில் இருந்த காத்திருப்பு கல் மீது ஏறி நின்று மரக் கிளையில் லிட்டிலை விடுவித்தாள்.

நீண்ட காலத்துக்குப் பிறகு சுதந்திரக் காற்று கிளியின் கொண்டையை சிலிர்க்க வைத்தது. சுற்றிலும் தனது பார்வையை அது திருப்பியது. இறக்கைகளை சிலிர்த்து விசாலமாக்கி, சிறகடித்து பறந்து தொலை தூரத்தில் உள்ள மற்றொரு மரத்திற்கு சென்றடைந்தது. அதைக் கண்ட காவ்யா மனதில் சோகம் அப்பியது. கண்கள் கண்ணீர் மல்க தயாரானதுதான் தாமதம்,  வேகமாக வீட்டுக்குள் ஓடி வந்து, படுக்கையறையில் குப்புறப்படுத்து அழத் தொடங்கினாள்.

எவ்வளவு நேரம் அழுதாள் என்று தெரியவில்லை. அவளது தாய், மெல்ல அவளது தலையை திருப்பி… என்னடி.. என்னாச்சு… ஏன் அழறே… என்று பதைபதைத்தாள். லிட்டிலை வெளியில் பறக்க விட்டேன். அது எங்கோ பறந்து போய்ட்டும்மா… என்றாள் அழுகையை நிறுத்தாமல்.

பைத்தியக்காரி… எங்கும் அது போகலடி… திறந்திருந்த கூண்டுக்குள்ள தானாவே அது வந்து உக்காந்துடுச்சி… போய் பார் என்றாள் அம்மா. வேகமாக ஓடிச் சென்று லிட்டிலை பார்த்து நிம்மதி அடைந்த காவ்யா, அதனிடம், “என்னைய மாதிரி நீயும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்க்கைய முடிச்சுக்க முடிவு செஞ்சுட்டிய்யா… என்று ரகசியமாக கிசுகிசுத்தாள்.

….

ஒரு வாரம் கரைந்தோடியதே தெரியவில்லை காவ்யாவுக்கு. வாசலில் கணவன் சத்தம் போடாமல் வந்து நின்றபோதுதான் நாட்கள் வேகமாக நகர்ந்துபோயிருந்தது தெரிந்தது.

வாசலுக்கு ஓடி வந்த அம்மா,  மருமகனை வாங்க… வாங்க… என வாயார வரவேற்றாள். கூடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்த மாறனிடம், அவனது குடும்பத்தாரின் நலம் விசாரித்தாள் அம்மா.

மாலையில், மூட்டை, முடிச்சுகளோடு புறப்பட தயாரான காவ்யாவின், கையில் கிளி கூண்டை கண்டான் மாறன்.

“நான் இல்லாம கிளி தவிக்குதுங்க… நம்ம வீட்டுக்கு கொண்டுபோய் வச்சுக்கனும்போல இருக்கு. அத்தை ஏதாவது சொன்னா என்ன பண்றதுன்னு தெரியல.. என்று தயக்கத்தோடு கூறிய அவள், அவனது பதிலுக்காக சில நொடிகள் காத்திருந்தாள்.

“சமாளிப்போம்” என்ற ஒரு வார்த்தையில் அவள் அதை எடுத்து வர ஆமோதித்தான் மாறன்.

வீட்டு வாசலில் காரில் புறப்படத் தயாராக இருந்த காரை நோக்கி நெருங்கிய  அப்பா, மாறனை பார்த்து, ஊருக்கு போனதும் ஃபோன் பண்ணுங்க. மாப்பிள.. நீங்கதான் இனிமே அவளுக்கு எல்லாம், நல்லா பாத்துக்குங்க… என்றார்.

கவலைப்படாதீங்க மாமா… நான் காவ்யாவை இந்த கிளியைப் போல் பத்திரமா பாத்துக்கிறேன் என்று மெல்ல சிரித்தான் அவன். “நானும் கூண்டில் சிக்கிய கிளிதான் என்பதை மாமனாரிடம் மறைமுகமாக சொல்லிவிட்டாரே மருமகன்” என்ற வியப்பு மேலிட, அவளையும் அறியாமல் உதடுகளில் சிரிப்பு மலர்ந்து மறைந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.