ஜோதிகாவின் “பொன்மகள்” வந்தாள் திரைப்படம் ஆன்லைனில் வெளியாகிறது
சென்னை: நேரடியாக அமெசான் ப்ரைமில், ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் வெளியிடப்படுகிறது. இப்படத்தை ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த இந்தப் படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் தொகை கொடுத்து இப்படத்தை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மே முதல் வாரத்தில் படம் அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள ஒரு படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாவது இதுவே முதன்முறை.
சூர்யாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்
பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் வெளியிடுவது தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் செயலாளரான பன்னீர்செல்வம், விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் வெளியிடப் போவதாக வெளியான செய்தி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையரங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட படங்கள், முதலில் திரையரங்குகளில்தான் ரிலீஸாக வேண்டும் என்பது விதி. இந்நிலையில், ஜோதிகா நடித்துள்ள படத்தை ஆன்லைனில் விற்றதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனக் கூறியுள்ளார்.
You must log in to post a comment.