ஜெயலலிதாவின் வேதா நிலையம்:அவசர சட்டம் பிறப்பிப்பு


சென்னை: சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அவர் மறைந்தபோது, அந்த இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு நினைவில்லப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலம் மற்றும் வீட்டை கையகபடுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது வேதா நிலையத்தை நினைவில்லமாக்குவதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.


இந்த சட்டத்தின்படி, வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ‘புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கப்படுகிறது.
அதன் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் செயல்படுவார்கள். இந்த அறக்கட்டளை, வேதா நிலையத்தை நிர்வகிப்பதுடன், அதனை பராமரிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கையை எடுக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.