அதிதீவிர புயல் அம்பன் கரையைக் கடந்தது
புதுதில்லி: மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே அதிதீவிர புயலாக அம்பன் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறியதாவது:
அம்பன் என பெயரிடப்பட்ட புயல் சற்று வலுகுறைந்து மிக தீவிர புயலாக வங்கக் கடலில் சுழன்றது. செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புயல் வங்கக் கடலுக்கு மேலே இருந்தபோது 220 கி.மீ. வேகம் கொண்டதாக இருந்தது. கரையை கடக்கும் போது வேகம் குறைந்து 160 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. புயலின் கண் பகுதி மேற்கு வங்கத்தில் இருந்தது. புயல் முழுமையாக கரையை கடந்த பிறகே அதிக மழை கொட்டத் தொடஙகியது. கரையை கடக்க புயல் 4 மணிநேரம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக் கடல் முழுவதும் கடல் அலைகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்பட்டன. அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

You must log in to post a comment.