சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை ஒரு சில நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் தொடர்கிறது. மார்ச் மாத இறுதியில் சினிமா சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கின. சினிமா, சின்னத்திரை போன்றவற்றை நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் நம்பியுள்ள சூழலில் இந்த முடக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதுதொடர்பாக பரிசீலனை செய்த தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளையும் ஒருசில நிபந்தனைகளைப் பின்பற்றி தொடர்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கலாம். உள்அரங்க படப்பிடிப்புகளை மட்டுமே நடத்தலாம். தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது.
படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
You must log in to post a comment.