சரிவை சந்திக்கும் வீடுகள் விற்பனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வீடுகளின் விலை சராசரியாக 20 முதல் 30 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளதாக விற்பனைச் சந்தை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. அத்துடன் நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்களின் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுவிட்டன. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை சந்தித்து வருகின்றனர். வருவாய் இழப்பு காரணமாக ஒருசில தனியார் நிறுவனங்கள் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை மட்டும் வேலைநீக்கம் செய்து வருகின்றன.
இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் உயிரை காத்துக்கொள்ள நல்ல ஊதியம் தரக்கூடிய வேலைவாய்ப்பையும் கூட இழக்க மக்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் ஆடம்பரப் பொருள்களை வாங்கும் எண்ணம் மக்களிடம் அடியோடு மறைந்துவிடும் சூழல் நிலவுகிறது.
வேலைக்கு செல்லும் பெரும்பாலோர் தங்களுக்கு என சொந்த வீடு ஒன்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெருநகரங்களில் அப்பார்ட்மெண்டுகள், பிளாட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்காக தங்களுடைய மாத வருவாயில் 60 சதவீதத்துக்கும் மேலாக இழக்கவும் தயாராகும் நிலையும் இருந்து வந்தது. இச்சூழலில் சொந்த வீடு வாங்கும் கனவை பெருநகர மக்களும், நடுத்தர மக்களுக்கும் தள்ளிப்போட்டுள்ளனர்.
பெரும் முதலீட்டில் அப்பார்ட்மெண்டுகளை கட்டியுள்ள நிறுவனங்கள், தனியார் பலர் என எல்லோருமே முதலீட்டுக்கான வருவாய் இழப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இச்சூழலில் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள வீடுகள் பலவும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 20 முதல் 30 சதவீதம் குறைவாக தருவதற்கு தயாராக இருந்தும் அதைப் பற்றிய சிந்தனை உள்ள நுகர்வோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதை கட்டுமான முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா அச்சம் நீங்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும். அதன் பிறகு மக்கள் சகஜநிலைக்கு திரும்புவர். ஆனாலும் தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக சில மாதங்களுக்கு ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலையே காணப்படும். நகைகள், கார் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் மீதான முதலீடுகளும் மிகவும் குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவு, முதலீட்டுக்கான வருவாய் இழப்பு, வங்கிக் கடன் நிலுவை, ஊழியர்கள் ஊதியம், அடுத்த முதலீட்டுக்கான ஆயத்தம் என பல்வேறு வகையிலும் அத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு கரோனா நோய்த் தொற்று மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must log in to post a comment.