சமுதாய பாதுகாப்பு திட்டத்தில் சாலையோர வியாபாரிகளும் பயனாளிகளாக சேர்ப்பு
புதுதில்லி: சமுதாய பாதுகாப்பு திட்டத்தில் சாலையோர வியாபாரிகளும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமரின் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து அவர் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
இன்று ஒட்டுமொத்தமாக 9 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய கால அவகாசம் மார்ச் 1-இல் இருந்து மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின்படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் ரூ.86,600 கோடி வரை வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதிக்கு பிறகு 7,200 புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்புறங்களில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28 முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது.
12 ஆயிரம் சுயஉதவிக்குழுக்கள்
12 ஆயிரம் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி மாஸ்குகள், 120 லட்சம் லிட்டர் சானிடைசர் கள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காக மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு ரூ.6700 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடியாகும். மே 13 வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு உள்ளூரில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி கொடுக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182-இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடம் அமைத்துத் தர அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமுதாய பாதுகாப்பு திட்டத்தில் சாலையோர வியாபாரிகளும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்திலும் இஎஸ்ஐசி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்துடன் பெண்களை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இரவுப் பணியில் ஈடுபடுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு பதில் ஓராண்டு பணியாற்றினாலும் தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.