கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
வாஷிங்டன், ஏப்ரல் 20: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்காவில் இந்த நோய்க்கான மருந்தை கண்டறியும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது மருந்தை சோதித்துப் பார்க்கும் பணிகளும் தொடங்கி விட்டன.
சியாட்டில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதல்கட்டமாக 4 தன்னார்வலர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் விளையாது.
இந்தத் தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சியாட்டில் நகரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயதுடைய பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தத் தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் நடைபெறவுள்ளன.
இந்தத் தடுப்பூசி அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. தடுப்பு மருந்தால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மையில் மிக வேகமாக இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது வைரஸுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதக்குலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணர் ஜான் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தட்டம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கொரோனா வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கியுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர இன்னும் 18 மாதங்கள் ஆகலாம்.
You must log in to post a comment.