கொரோனாவைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழக முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
சென்னையில் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியது;
பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் அரசு உதவி செய்கிறது. தற்போது பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பிரச்னை எழவில்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்துத் துறை அதிகாரிகளும் துணை நிற்பதால் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. வெளிமாநிலங்களில் இருந்தும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதற்கு ஏற்ப ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்.

எனவே கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.
கொரோனா பரவலைத் தடுக்க நாட்டில் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையில் 53 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. கொரோனா பாதிப்பு இறப்பு விகிதமும் . 0.67 என்ற அளவில் தமிழகத்தில்தான் குறைவாகவே உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில்களை ஈர்க்கவும் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.