கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-மோடி
4-ஆவது முறையாக அமலாகும் ஊரடங்கு வரும் 18-ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும்
புதுதில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றார் அவர்.
4-ஆவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு உரையாற்றியது:
இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமுமே கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. நாம் இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்னையை நாம் கேள்விப்பட்டதோ, சந்தித்ததோ இல்லை. கொரோனா மனித குலத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த் தொற்றால் இந்தியாவில் நமக்கு அன்புக்குரியவர்கள் சிலரை இழந்திருக்கிறோம். கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு முக்கியமானதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் பிபிஇ கிட்டுகள், என்.95 மாஸ்குகளை தயாரித்து வருகிறோம்.
இந்தியா தற்சார்புடன் இருப்பதை சுயநலத்துடன் இருப்பதாகக் கூறமுடியாது. தற்சார்புக்கு பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஜனநாயகம், நவீன தொழில்நுட்ப எரிசக்தி ஆகிய 5 தூண்கள் அவசியம்.
உலக நாடுகளுக்கு நம்பிக்கையின் ஒளியை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவின் மருந்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. .
இந்தியா தனது கொள்கைகளால் உலகை மாற்றியிருக்கிறது. இந்தியா தற்போது வளர்ச்சியின் பாதைக்கு திரும்பியுள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்பதில் இந்தியா நம்பிக்கையும், உறுதியும் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா ஆகும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி வழங்கப்படும். இதுபற்றி நாளை, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளிக்கும்.
வலிமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நாட்டின் ஜிடிபியில் 10 சதவீதம் நிதி கொரோனாவை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்படும். ஜன்தன், ஆதார் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தற்போது நமக்கு உதவுகின்றன.
நாட்டில் கொரோனா பாதிப்பு முக்கிய உற்பத்தித் துறைகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது. மக்களின் உள்ளார்ந்த சக்தியை கொரோனா பாதிப்பு வெளிக்காட்டியிருக்கிறது. உள்ளூர் சந்தைகள், அவற்றுக்கான பொருள்களின் விநியோகத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
முறையான முயற்சி இருந்தால் உள்ளூர் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறும். உள்ளூர் தயாரிப்பு பொருள்களை அனைத்து இந்தியர்களும் பெருமையுடன் வாங்க வேண்டும்.
நாட்டில் 4-ஆவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். இப்போது நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு மற்றவற்றில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.
மாநில அரசுகளின் பரிந்துரைப்படி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து வரும் 18-ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார் மோடி.
You must log in to post a comment.