கொரோனாவிடம் நம்மை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்?

சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 177 நாடுகளில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 59,140 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 20 சதவீதத்தினர் மட்டுமே மீண்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சனிக்கிழமை அதிகாலை வரை 2,804-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து யாரெல்லாம் தப்பிக்க முடியும் என்ற தற்காப்பு சிந்தனை எல்லோரிடமும் கேள்விகளாக எழுந்து நிற்கின்றன.
அதற்கான சில தீர்வுகளாக கீழே உள்ளவை தற்போதைய சூழலில் உள்ளன.

முதல் தற்காப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் சென்று வருவோர் – குறிப்பாக மளிகைக் கடைகள், பால் அங்காடிகள், காய்கறி அங்காடிகள், மாமிச அங்காடிகளுக்கு சென்று வருவோர் கவனிக்க வேண்டியவை:
எங்கு வெளியில் செல்வதானாலும் சிறு பாட்டிலில் எளிதில் காற்றில் காய்ந்துவிடக் கூடிய ஆல்கஹால் கலந்து கிருமிநாசினி திரவத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இவை மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.
வெளியிடங்களில் தவிர்க்க முடியாத சூழலில் முகத்தை தொடுதல், கண்களை துடைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் நிலை (அரிப்பு காரணமாக) ஏற்பட்டால் கையில் எடுத்தச் சென்ற கிருமிநாசினியை கையில் 2 சொட்டுகள் விட்டு நன்றாக துடைத்துக்கொணடு கண்களையோ, முகத்தையோ தொட வேண்டும்.
ீட்டுக்கு வந்ததும் எந்த அன்றாட உபயோகிப்பு பொருள்களையும் தொடாமல் கைகளை சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக 20 விநாடிகள் கழுவ வேண்டுவது அவசியம. கிருமிநாசியும் பயன்படுத்தலாம்.
வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்துகொள்வது பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.

கரோனா எப்படி பரவும்?: கரோனா வைரஸ் வாய், மூக்கு, கண்கள் வழியாகவே பெரும்பாலும் உடலில் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் முகக் கவசம் அணிவதும், முகத்தை தொடாமல் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

பொது இடங்களில் செய்ய வேண்டியது: உங்களுக்கு ஒவ்வாமை மற்றும் ஏதோ காரணத்தால் இருமல், தும்மல் ஏற்பட்டால் நீங்கள் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்த வேண்டும். அவற்றை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் போட வேண்டும். அத்துடன் முடிந்தவரை கொரோனா நோய்த் தொற்று ஆபத்து நீங்கும் வரை கைக்குட்டை
பயன்படுத்தாதீர்கள்.

காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் காணப்படுவோரிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது சிறந்தது. மிக நெருங்கிய உறவுகளாக இருப்பினும் அவர்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பது அவசியம். இத்தகைய பாதிப்புகளை இருப்பவர்களை
கட்டாயம் வெளியில் அனுப்பக் கூடாது.
நமக்கும் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. வீட்டில் மற்றவர்களிடம் இருந்து சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் உபயோகித்த எந்த பொருளையும் மற்றவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
குழந்தைகளையும், மிக வயதானவர்களையும் அருகில் சேர்க்கக் கூடாது.
எப்போதும் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
துணிகளை அவ்வப்போது மாற்றிக்கொள்வதோடு, உபயோகித்த ஆடைகளை உடனுக்குடன் சோப்பு கலந்த நீரில் மூழ்கடித்து ஊற வைக்க வேண்டும்.

வைரஸ் தொற்றை எப்போது அறிய முடியும்?:
தற்போதைய சூழலில் இருமல், காய்ச்சல் இருந்தாலே மருத்துவமனைகளில் உங்களுக்கு கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழக்கூடும். காரணம் கொரோனாவின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய 14 நாள்கள் ஆகும்.
நீங்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்ளுடன் தொடர்பில் இருந்ததோ, பொது இடங்களில் கடந்த ஒருசில நாள்கள் முன்பு சென்றுவந்த இடங்களில் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்திருந்ததாலோ உங்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அச்சப்பட வேண்டாம். உடனடியாக மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்கள் உங்களின் இரத்தம், சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைப்பர். ஆய்வின் முடிவு தெரியும் வரை
அரசு மருத்துவ முகாம்களில் இருப்பது சிறந்தது. காரணம் நோய்த்தொற்று பாதிப்பு இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் நிலையில், அரசு நிர்வாகம் தேவையான ஊட்டச் சத்து உணவுகளை வழங்குவதோடு, அவ்வப்போது உங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும் செய்வதால்
போதுமான உயிர் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.

அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் தன்மை என்ன?

முதலில் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும். அதைத் தொடர்ந்து வறட்டு இருமல் காணப்படும். ஒரு வாரகாலத்தில் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
ஆனால் காய்ச்சல், இருமல், சளி இருந்தால் அது கொரோனா வைரஸ் தாக்குதல்தான் என நாமே முடிவு எடுத்துவிடுவது தவறானது.

கொரோனா வைரஸ் தீவிரமடையும் நிலையில், நிமோனியா, சிறுநீரக கோளாறு, தீவிர சுவாசப் பிரச்னை போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படும். பொதுவாக கொரோனா பாதிப்பை ஒருவர் அதன் தொற்று தொடங்கிய ஒரு வாரத்திலேயே தெரியும், ஒருசிலருக்கு மட்டுமே பாதிப்பு தெரிய 10 நாள்கள் கூட எடுத்துக் கொள்ளும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உடல் நலக்குறைவு வெளிப்படையாக தெரியத் தொடங்கும் முன்பே அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த வைரஸ் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால்தான் எல்லோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் கட்டாயம் 21 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவம் சிறந்ததா?
எத்தகைய வைரஸையும் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒருசில நோய்த்தொற்றுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக தோன்றியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது இதுவரை பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் அதன் சாதக, பாதகங்களை இப்போது அலசுவது தேவையற்றது.

புதிய வைரஸ் எப்படி பரவியது?

சார்ஸ் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பெண் மீன்வியாபாரி உடலில் இருப்பது முதலில் தெரியவந்தது. அது வௌவால் அல்லது எறும்புத்திண்ணி போன்ற ஏதோ ஒரு விலங்கிடம் காணப்படும் வைரஸ் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனுக்கு தொற்றி இருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

எப்படி பரவும் வாய்ப்பு?

ஒருவரின் இருமல், எச்சில் துளிகள் மூலமே மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அடைந்தவர் தொட்ட இடங்கள், அவர் உபயோகித்த பொருள்கள் மூலமாக பரவும் வாய்ப்பு உள்ளது. கொரோனா தொற்று உள்ளவருடன் நெருங்கி நிற்கும் சூழலில் பரவும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய கழிவறையை பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் மலம் வழியாக இது பரவவாய்ப்பில் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இருப்பினும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தும்போது , நாம் கொண்டு சென்ற கிருமி நாசினியை உபயோகித்து, தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்த பிறகே பயன்படுத்துவது சிறந்தது.

வருமுன் காப்போம் , நம் சந்ததியை பாதுகாப்போம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.