கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வர்த்தகம்
புதுதில்லி, ஏப்ரல் 12: இந்தியாவில் ஏபரல் 14 வரை நீடித்து வரும் ஊரடங்கில் பொருளாதாரத்தில் 5 சதவீதம் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாகவும், இது முதல் காலாண்டிலும், இரண்டாவது காலாண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டில் நாள்தோறும் 4.5 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் இந்திய ரூபாயில் 7617 கோடியே 65 லட்சம் ) செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுகிறது. இருப்பினும் பொருளாதாரத்தைக் காட்டிலும் மனித உயிர் இன்றியமையாதது என்பதை கருத்தில்கொண்டு மத்திய அரசு தொடர்ந்து கரோனாவுக்கு எதிரான போரை சந்தித்து வருகிறது.
ஊரடங்கால் ஏற்றுமதி துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 1.5 கோடி பேரில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்றுமதி முடங்கியதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் ரத்தாகிவிட்டன.
ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30-வரை பெரும்பாலும் நீடிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் சூழலில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முற்றிலும் முடங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சூடு பிடிக்க பல மாதங்கள் ஆகக் கூடும். இதனால் ஏராளமானோர் தற்காலிக வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தாலும், தற்போதைய ஏற்றுமதி ஆர்டர்களை முடிந்தவரை அனுப்புவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு தக்க பாதுகாப்புடன் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பது இந்திய ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
You must log in to post a comment.