கொரானா பாதிப்பு சீரடைந்த பிறகே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
மத்திய அரசு தகவல்
புதுதில்லி, ஏப்ரல் 6: கொரானா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்ட பிறகே பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும என மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி கொரானா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் உள்ளது.. இதை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் பணியில் இந்திய அரசு ஈடுபடத் தொடங்கியதன் காரணமாக கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஒரு சில கல்லூரிகள் ஆன-லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தி வருகின்றன.
பள்ளிகள்,கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் எழுந்துள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியுள்ளதாவது:
நாட்டில் 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். அவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய சொத்து. அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களின் பாதுகாப்பு முக்கியம். இதனால் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் எப்போது திறப்பது என்ற எந்த முடிவும் தற்போது எடுக்க முடியாது.
வரும் 14-ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இருந்து நாடு எந்த அளவுக்கு மீண்டுள்ளது என்பதை ஆய்வு செய்வோம். அதன் பிறகே பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
ஒருவேளை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் ஆலோசித்து வருகிறோம்.
தற்போது நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்களை திருத்துவது போன்ற பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது என்றார்.
You must log in to post a comment.