கீழடியில் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடக்கம்


சென்னை: மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் இறுதிவாரத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் புதன்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 19-இல் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. மார்ச் 20 வரையிலான காலத்தில் கொந்தகை பகுதியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டிருந்தன. மார்ச் 24-இல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
கொரோனா நோய்த் தொற்று பரவல் இல்லாத இடங்களில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தற்போது கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு பணிகள் தொடங்கியுள்ளன.
கீழடியில் ஏற்கெனவே நடந்த ஐந்து கட்ட அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன.
ஆறாம் கட்ட அகழாய்வு கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவு செய்து பணிகளை மேற்கொண்டுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.