காரிப் பருவத்துக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன்


புதுதில்லி: ரபி அறுவடைக்கு பிறகு தற்போதைய காரிப் பருவத்துக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்புத் திட்டம் குறித்து வியாழக்கிழமை 2-ஆவது நாளாக விளக்கமளித்து அவர் கூறியது:
கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் சுமார் 2.5 பேருக்கு கிஷான் கிரடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன் கிடைக்கும்.
நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி அவசரகால நிதி வழங்கப்படவுள்ளது.
ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறும் நடுத்தர குடும்பத்தினருக்கான வீட்டு கடன் மானியத் திட்டம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.
அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ சென்னா வழங்கப்படும்.
இலவச உணவு தானிய திட்டத்தின் கீழ் 8 கோடி வெளிமாநில தொழிலாளர்கள் பலன் அடைவர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்க ரூ.3500 கோடி செலவிடப்படுகிறது.
.23 மாநிலங்களின் 67 கோடி குடும்பங்கள் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
அரசு-தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும். குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
முத்ரா-ஷிசு திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு சுமார் ரூ.1500 கோடி வரை நிவாரணம் வழங்கப்படும். முத்ரா-ஷிசு திடடத்தில் சுமார் 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே 3 மாதம் கடன் தவணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.10 ஆயிரம் தொடக்க மூலதனத்துடன் தொடங்கும் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும். சுமார் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டுக்கடனுக்கு மானியம் வழங்க மற்றும் வீட்டுவசதித் துறையை மேம்படுத்தரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீட்டுக் கடன் மானியத் திட்டம் மூலம் 3.3 லட்சம் நடத்தர குடும்பம் பயன் அடையும். வீட்டுக்கடன் மானியத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் வீட்டுக்கடன் மானியத் திட்டத்தில் 2.5 லட்சம் நடுத்தர குடும்பங்கள் பலனடையும். வீட்டுக்கடன் மானியத் திட்டத்தால் இரும்பு, சிமென்ட், போக்குவரத்து துறையில் தேவைகள் அதிகரித்து வேலைவாய்ப்புகள் உருவாகும்.
வேலை வாய்ப்பை ஊக்குவிக்க ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிஏஎம்பிஏ நிதி மூலம் நகர்புற, புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாகும் என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.