கற்பனைக்கு எட்டாத கொரோனா பாதிப்பு!


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இன்றைக்கு உலகின் போக்கையே மாற்றியுள்ளது. அதன் தாக்கம் எதுவரை இருக்கும். அதனால் பின்னாளில் ஏற்படப் போகும் பாதிப்புகள் எத்தகையவை என்பதை கற்பனை செய்ய முடியாது. அந்த அளவுக்கு உலகில் மிகப் பெரிய பொருளாதார சரிவையும், தனிமனித வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவு தெரிவிக்கிறது. இதுவரை உலகில் 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நோய்த் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ஜிடிபி கடுமையாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஜிடிபி மிகக் கடுமையாக சரிவை எட்டியுள்ளது.
உலகம் இந்த சரிவில் இருந்து மீளவும், அடிப்படை வசதிகளுக்கு ஏங்கித் தவிக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்குக் கூட பல நேரங்களில் உணவு கிட்டாத சூழலை சந்திக்கும் சூழலில் இருந்து மிளவும் எத்தனை காலம் ஆகும் என்பதைக் கூட கணிக்க முடியாத இக்கட்டான சூழல்தான் தற்போது நிலவுகிறது.
வைரஸ் நோய்த் தொற்றுகள் மனித சமுதாயத்துக்கு புதியவை அல்ல. பண்டைய வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் மனித வாழ்வில் அவ்வப்போது இத்தகைய பாதிப்புகள் வந்துள்ளதும், அவற்றில் இருந்து மீண்டுள்ளதும் தெரியும். ஆனால் அன்றைய காலகட்டங்களில் இருந்த மக்கள் தொகையும், வாழ்க்கை சூழலும் வேறு. இன்றைய சூழலும், பரிணாம வளர்ச்சி அடைந்த வாழ்க்கை முறையும் வேறு.
மனித வாழ்வில் நாகரீகம் அவசியமானது தான். ஆனால் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு சவால்விடும் போக்கு அதிகரித்துள்ள சூழலில்தான், இயற்கையின் மிகப்பெரிய தாக்குதல்களை சந்திக்கத் தொடங்கியுள்ளோம்.
மனித வாழ்க்கை அதிகபட்சம் 36 ஆயிரம் நாள்கள்தான் என்பதை எப்போதுமே மனிதன் உணர தவறுகிறான். நிரந்தரமாக இந்த பூமியில் வாழப்போவது போன்ற எண்ணம் காரணமாக பேராசை, சுயநலம், எல்லாமே தன்னுடையவை, தனக்கு நிகரானவர் யாரும் இல்லை போன்ற மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனிதனின் போக்குக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி.
கோடிக்கோடியாக பணம் இருந்தும், தன்னுடைய வாரிசுகளின் உயிரையும், தனக்கு நெருக்கமானவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லையே என்ற விரக்தியில், தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டு சம்பாதித்த பணக் கட்டுகளை வீதியில் வீசியோரையும், பல அடுக்கு மாடிக் கட்டடத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலையுண்டவர்களையும் நாம் இன்றைக்கு காண்கிறோம்.
ஒரு மனிதனின் வளர்ச்சி மற்றொரு மனிதனுக்கு பிடிக்காமல் போகிறது. ஒரு ஊரின் முன்னேற்றம் மற்றொரு ஊருக்கு பிடிக்காமல் போகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சி மற்றொரு கட்சிக்கு பிடிக்காமல் போகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றொரு நாட்டுக்கு பிடிக்காமல் போகிறது.
தெரு நாய்களைப் போன்று அவரவர் எல்லைகளை வகுத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனின் அர்த்தமற்ற மனப்போக்கில் மாற்றம் ஏற்படுத்த இயற்கை இந்த கொரோனா நோய்த்தொற்று மூலம் வாய்ப்பு அளித்திருக்கிறது.
இன்றைக்கு சந்திக்கும் அனுபவத்தை தனிமனிதன்,, சமுதாயம், இந்த உலகம் எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்தே தனிமனித வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகியன எதிர்காலத்தில் அமையும். இல்லாவிடில் இதுபோன்ற இடர்பாடுகளை தொடர்ந்து சந்திப்பதுதான் மனிதனின் வாடிக்கையாக அமையும் என்பதுதான் நிதர்சனம்.

தலையங்கச் செய்தியை அனைத்து வாசகர்களும் படிப்பதில்லை. தலையங்கத்தை சுமார் 15 விழுக்காடு வாசகர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்தும் உண்டு. “செய்தித்தாள்களில் மிகவும் புறக்கணிக்கப்படுகின்ற, குறைவாக மதிப்பிடப்படுகின்ற பகுதி தலையங்கம். இருப்பினும், பொது மக்களுக்குத் தொண்டு செய்யும் இதழியலின் ஒரு தலையாய கருவியாக இருக்கிறது.” என்று ஜான் ஹோகன்பர்க் என்பவர் தலையங்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.