கரோனா பாதிப்பில் கிடைக்கும் நன்மைகள்!
சென்னை: உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனால் சில நன்மைகளும் அரங்கேறி வருகின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
பூமியின் இயற்கை சூழலை எவ்வளவு கெடுக்க முடியுமா அவ்வளவையும் இந்த மனிதகுலம் கெடுத்து வருவதன் உச்சமாக விளைநிலங்கள் தொழிற்சாலைகளாக மாறின. வனவிலங்குகளின் வசிப்பிடங்கள் மனிதனின் உல்லாச வாழ்விடங்களாக மாறின. இயற்கை சூழலை காத்து வந்த வனப்பகுதி மரங்கள் அழிக்கப்பட்டன. ஏராளமான வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு விட்டன. யானையடி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன. உணவுக்காக எந்த உயிரையும் கொல்ல துணிந்த மனிதன் இயற்கை விதிகளை மீறி தொடர்ந்து வேட்டையாடுவது தொடர்கிறது. பல உயிரினங்கள் கிட்டத்திட்ட அழிந்துவிட்டன. காற்றின் மாசு அதிகரித்து மனிதன் சுவாசிக்க லாயக்கற்றதாக மாறத் தொடங்கிவிட்டது.

அப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைக்கு மனிதகுலம் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸுக்கு அஞ்சத் தொடங்கியுள்ளது. வல்லரசுகளாக மார்தட்டிக் கொண்ட நாடுகள் எல்லாம் கரோனா வைரஸ் மீது தங்கள் ஆளுமையை செலுத்த முடியாது தவிக்கின்றன. உயிரினங்களில் தன்னை மிஞ்சிய உயிரினம் இல்லை என்ற மனிதனின் மமதையையும், மாயையையும் இன்றைக்கு கரோனா சிதைத்துள்ளது.
எந்த உயிரினத்தையும் சாப்பிடலாம் என்ற எல்லையற்ற போக்கின் காரணமாகத்தான் கரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றே சொல்லாம். காரணம் வௌவால், எறும்புத்திண்ணி போன்ற ஏதோ ஒரு விலங்கினத்தில் காணப்படும் வைரஸ்தான் இயற்கைக்கு மனிதன் விட்ட சவாலுக்கு நடைபெறும் எதிர்தாக்குதலாக கரோனா வைரஸாக மாறியிருப்பதை இப்போதாவது மனிதகுலம் உணர வேண்டும்.

பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு அவசியம். இயற்கையை பேணுவது அவசியம். இயற்கை வளங்களை பாதுகாப்பது அவசியம் கடந்த ஒரு மாதகாலமாக கரோனா வைரஸ் தாக்குதலின் தீவிரம் காரணமாக உலகின் பல நாடுகளில் மனிதன் வெளியில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கூட 144 தடையுத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறான்.
உலகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் மனிதனால் தற்காலிகமாக இயற்கையை அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்ள ஓரளவு காலஅவகாசம் கிடைத்துள்ளது.
காற்று மாசு குறைகிறது: கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக உமிழ்ந்து காற்று மாசை ஏற்படுத்திய வாகனங்கள் இயங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளை பயமுறுத்தி வந்த காற்று மாசு மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. எந்த வல்லரசும் தன்னுடைய அதிகாரத்தாலோ, ஆலோசனையாலோ, கொள்கைகளாலோ கட்டுப்படுத்த முடியாத காற்றுமாசை கரோனா வைரஸ் கட்டுப்படுத்தியுள்ளது ஒரு வகையில் நன்மையாக அமைந்துள்ளது.

எதை வேண்டுமானாலும் உணவாக சாப்பிடலாம் என்ற கட்டற்ற வரம்பை இனி மனிதன் குறைத்துக் கொள்ளும் நிலை இந்த அச்சத்தின் காரணமாக ஏற்படும் என்பதும், இயற்கையைப் பேணி பாதுகாக்காவிடில் மனித சமூகம் ஒருகட்டத்தில் அழிந்துவிடும் என்ற எச்சரிக்கை தூதுவனாகவே கரோனா வைரஸ் இன்றைக்கு மனிதனை ஆட்டிபடைக்கிறது என்பதும்தான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மற்றொரு நன்மை.
கரோனா வைரஸை கட்டுப்படுத்திய பிறகு பெரிய சாதனை படைத்துவிட்டதாக மீண்டும் பழைய பாதையை நோக்கி மனிதன் திரும்பினால் கரோவை விட மிகப் பெரிய ஆபத்து வந்தே தீரும் என்பதுதான் இயற்கையின் நியதி.
You must log in to post a comment.