கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்குமா?


சென்னை, ஏப்ரல் 12: இப்போது தமிழ்நாட்டில் கபசுரக் குடிநீர் அருந்துவது அதிகரித்துள்ளதால் அந்த மருந்து கிடைப்பதில் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. சில இடங்களில் அதன் விலை கூட ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது.
இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் கொரோனா வைரஸ் வருவது தடுக்கப்படுமா, கொரோனா பாதித்தவர்கள் குடித்தால் குணமடைவார்களா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. இதற்கான பதிலாகவே இந்த கட்டுரை அமைகிறது.

கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை மணப்பாகு ஆகியவற்றை வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான ஆற்றலை மனித உடலுக்குத் தருபவை.

இவற்றில் கபசுர என்ற பெயரிலேயே கபத்துக்கும், சுரத்துக்கும் உரிய மருந்து என உணர்த்தும் மூலிகை சூரணத்தை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தபோதே ஆயுஷ் துறை இதற்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள் பற்றி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது.
சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸின் தன்மை குறித்து கிடைத்த ஒருசில தகவல்களின் அடிப்படையில்தான் கபசுர குடிநீர் இதற்கு தீர்வாக அமையும் என தேர்வு செய்தனர். குறிப்பாக நெஞ்சில் சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல் போன்ற நிமோனியா அறிகுறிகள் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியதை அடுத்து இத்தகைய பாதிப்புகளுக்கு கபசுர குடிநீர் சிறந்தது என சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கரோனா வைரஸ் தொற்று மனிதனின் உடலில் புகுந்து செல்களை ஆக்கிரமிக்க அமிலத்தன்மை கொண்ட ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை நீர்த்துப்போகச் செய்யும் ஆற்றல் சின்ஹோனா மரப்பட்டையில் இருந்து கிடைக்கும் காரத் தன்மையுடைய குயினைனை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சிதைக்கிறது. இதனால் கொரோனா வைரலஸ் செல்சுவர்களை கடக்க முடியாமல் இறந்துபோகிறது என்பது ஆங்கில மருத்துவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்காலிகத் தீர்வாக இந்த மருந்து இருப்பதால் கொரோனா பாதிப்பை சந்தித்து வரும் நோயாளிகளுக்கு கொடுக்கபபடுகிறது. இதையே அமெரிக்காவும் இந்தியாவிடம் கேட்டு பெற்றுள்ளது. உலகில் கொரோனா பாதித்த நட்பு நாடுகளுக்கும் இந்த மருந்தை அளிக்க இந்தியா தயாராகி வருகிறது.
இந்நிலையில், சளி, மூச்சிரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீரும் நிச்சயம் பலன்தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பான முழுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
கபசுரக் குடிநீர் சூரணத்தில் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதோடை வேர், கற்பூரவல்லி, சந்தில்,கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம், நிலவேம்பு ஆகியவை அடங்கியுள்ளன.
5 கிராம் பவுடரை 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி அதை வெறும் வயிற்றில் காலை வேளையில் மட்டும் தொடரந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


கபசுர குடிநீரை குடிப்பதால் பக்க விளைவுகள் வருமா?
ஆங்கில மருத்துவத்தில் தற்காலிகத் தீர்வாக அமைந்துள்ள சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சில மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த அச்சம் சித்த மருத்துவத்தில் தேவையில்லை என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த கிராமப்புற தாவர வல்லுநர் வைத்தியர் செல்வம் கூறியது;
இந்த மருந்தை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வரும் என அஞ்ச வேண்டியதில்லை. இயற்கை மூலிகைகளால் ஆன இதை குடிப்பதால் இயற்கையாகவே உடல் எதிர்ப்பு சக்தியை பெறும். வைரஸ் தொற்று வந்தால் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பதே எங்களின் கருத்து. இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள தொடர்ந்து நாங்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியபோது நிலவேம்பு குடிநீர் உகந்த மருந்தாக பின்பற்றப்பட்டது. ஆங்கில மருத்துவர்களும் கூட இதை பரிந்துரை செய்தனர். அதுபோன்றதொரு இக்கட்டான நிலை தற்போது உள்ளது. ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சித்த மருத்துவத்துக்கும் அளித்தால் மூலிகை மருத்துவமும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சரியான தீர்வாக இருப்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றார்.


எச்சரிக்கை தேவை: உடலுக்கு எந்த எதிர்வினைகளையும ஏற்படுத்தாது என்றபோதிலும் கபசுர குடிநீர் சூரண பாக்கெட்டுகளை வாங்கும்போது அவை முறையான சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டதா என உறுதி செய்து வாங்குவது நல்லது.
ஏனெனில் கலப்பட கலாசாரத்தில், தட்டுப்பாடு, அதிக விலை போன்ற காரணங்களால் இன்றைக்கு ஏதோ ஒரு பவுடரை கூட பொட்டலமாக போட்டு கபசுரக் குடிநீ்ர் என ஏமாற்றும் போக்கு உள்ளது. அதனால் பொதுமக்கள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கபசுர குடிநீர் குடித்தால் கொரோனா வராதா?


இதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றே சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தடுப்பு மருந்து அல்ல. நோய் வந்தால் அதை எதிர்க்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்றே சொல்கிறோம். பொதுவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது வந்த சுவடு தெரியாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதற்கு முழுமையான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அதையே நாங்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்துகிறோம் என்கின்றனர் சித்தமருத்துவர்கள்.
நவீன மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்து வணிகத்தோடு சித்த மருத்துவர்கள் போட்டியிடும் சூழல் இல்லை. இதற்கு காரணம் நவீன மருத்துவத்துக்கு உலக அளவில் ஏராளமான ஆராய்ச்சி கூடங்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். ஆனால் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிக்கு அத்தகைய கட்டமைப்பு இன்னமும் முழுமை அடையவில்லை. அத்தகைய கட்டமைப்பு உருவாக்கப்படுவதோடு, சித்த மருத்துவத்தில் மறைக்கப்பட்ட, மறந்துபோன மருந்துகளையும் கண்டறிந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் சித்த மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நோய்த் தொற்றுக்கு காரணமான கிருமிகளை ஆராய்ச்சி செய்வோர், அதற்கான ஆங்கில மருந்துகளுக்கான கலவைகளை பரிசோதிப்பவர்கள், ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ள சித்த மருத்துவத் துறையின் அனுபவசாலிகள் ஆகியோரை கொண்ட ஒரு குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைப்பது எளிது. அத்தகைய குழுவின் மூலம் தற்போதைய அவசரத் தேவைக்கு எளிய தீர்வு காண முடியும் என்பது மாற்று மருந்து நிபுணர்களின் யோசனையாக உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.