ஊர் திரும்பும் தொழிலாளர்கள் பயணச் செலவை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி
புதுதில்லி: பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான பயணச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பயணச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது மத்திய அரசு. இதற்கு அரசு ரூ.100 கோடியை செலவிட்டது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரயில்வே துறை ரூ. 151 கோடியை நிதியாக அளிக்கும்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச பயணத்தை அளிக்க முடியாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

You must log in to post a comment.