ஊரடங்கு காலத்தில் சிக்கியவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லலாம்


உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுதில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பின்பற்றி அவரவர் இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே தங்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாட்டை மீறி வெளியேறத் தொடங்கியதால் பெரும் சவாலை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி அளித்துள்ளது.
புதன்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டார்.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறியதுச
வெளி இடங்களில் சிக்கித் தவிப்போருக்கு மட்டுமே ஊர் திரும்பவே போக்குவரத்துக்கான பேருந்துகள் இயக்கப்படும்.
முன்னதாக பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இருக்கைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கித் தவிக்கும் நபர்கள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு இடையில் செல்ல விரும்பினால், அனுப்பும் மற்றும் பெறும் மாநிலங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து சாலை வழியான இயக்கத்திற்கு பரஸ்பரம் ஒப்புதல் அளித்துக் கொள்ளலாம்.
சொந்த இடங்களுக்குச் செல்லும் நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று நோய்த் தொற்று இல்லாதவர்களாக இருப்பின் அனுமதிக்கப்படுவர்.
சொந்த இடங்கள் செல்லும் நபர்கள் இலக்கை அடைந்ததும், அத்தகைய நபர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மேலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.