ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?
பிரதமர் மோடி நாளை அறிவிப்பார்
புதுதில்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பாரத பிரதமர் மோடி சனிக்கிழமை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. அது 3-ஆம் கட்டத்தை எட்டுவதைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கவே விரும்புகின்றன.
இச்சூழலில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை காணொலி மூலம் பேசவுள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியும் சனிக்கிழமை மாலை தனது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட 19 நிபுணர்கள் கொம்ட மருத்துவ வல்லுநர் குழு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குழுவைச் சேர்ந்த மருத்துவர் பிரதீபா ” தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதார கட்டமைப்பு வலிமையாக உள்ளது. இருப்பினும் நோய் பரவலைத் தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு தேவை. இதனால் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு உள்ள சூழலில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றினால் நோய் பரவலின் வேகம் குறையும் என்ற கருத்து வலுக்கிறது. இதனால் பிரதமர் மோடி இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெறும் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must log in to post a comment.