இன்று முதல் 17 தொழிற்பேட்டைகள் 25% தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி

சென்னை: தமிழகத்தில் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் 25 சதவீதம் தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் தொழிற்பேட்டைகள் செயல்படவில்லை.
தற்போதைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, ஊரடங்கு காலத்தில் ஒருசில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது. அவ்வகையில் திங்கள்கிழமை முதல் (25.5.2020) சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையைப் பரிசீலித்து, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்கு உட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் 25-ஆம் தேதி முதல் அந்த தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாது.
தினமும் தொழிலாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும்.
பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
பணியின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்படவேண்டும்.
சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.