இந்தியாவில் கொரானா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது
புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 4 ஆயிரத்தைக் கடந்தது.
நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 67 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 109-ஆகவும் உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690-ஆகவும், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571-ஆகவும் உயர்ந்துள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 292 பேர் மீண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல் உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களின் ஒற்றுமையையும், சகிப்புத்தன்மையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனைவரும் அவரவர் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு வாயிலில் விளக்கு ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் மத, இன, கட்சி வேறுபாடின்றி பெரும்பாலோர் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள திட்டத்தில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 20 பக்கம் கொண்ட இந்த ஆவணத்தில், அரசு எடுக்க விரும்பும் சில நடவடிக்கைகளில், கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சீல் வைப்பது மற்றும் அப்பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவது ஆகியவை அடங்கும்.
கொரோனா வைரஸுக்கு இரண்டு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு பாதிப்பு இல்லையெனில் பரிசோதனைக்குள்ளானவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் கொரோனா வார்டுகள் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர். கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர்.
You must log in to post a comment.