ஆரோக்கிய சேது செயலி தகவலை தவறாக பயன்படுத்தினால் சிறை

மத்திய அரசு எச்சரிக்கை


புதுதில்லி: ஆரோக்கிய சேது செயலி தகவல்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த ஆப் செயல்பட பயனர்கள் இருப்பிடம், ப்ளூடூத் ஆகியவற்றை ஸ்மார்ட்போனில் ஆன் செய்திருக்க வேண்டும். இதன்மூலம் எந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை அரசு தெரிந்து கொள்கிறது.
இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை 9.8 கோடி பேர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம். தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பயனர்களின் இருப்பிட தகவல் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாள்களில் நீக்க முடியும். பரிசோதனை செய்தவர்கள் 45 நாள்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 60 நாள்களிலும் தங்களைப் பற்றிய தகவலை செயலி பதிவில் இருந்து நீக்கி விடலாம்.
அத்துடன் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-இன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.