ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இன்றி முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நோய்த் தொற்று பரவல் குறைந்த இடங்களில் ஒருசில தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமையுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முகக் கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான். நாட்டிலேயே அதிகமாக 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி: ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது. அதேபோல் ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்துக்கல்வி நிறுவனங்களும் திறப்பதற்கான தடை தொடர்கிறது. கல்வி நிறுவனங்கள் இணையவழி மூலம் பாடம் கற்றுத் தருவது ஊக்குவிக்கப்படும்.

ஆகஸ்டு மாதம் மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது.பெரும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீடிக்கிறது. அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு பொது பொழுதுபோக்கு கலாசாரங்களுக்கும் தடை தொடர்கிறது.

தேநீர் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம். பார்சலுக்கு இரவு 9 மணி வரை அனுமதி உண்டு. தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. சுதந்திர தினவிழா மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்.

 பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  ரூ.10 ஆயிரம் வருவாய் உள்ள வழிபாட்டு தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருள்களை ஆன-லைனில் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.