அமிதாப், ரஜினி நடித்த குறும்படம் வெளியீடு


சென்னை: இந்திய திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடித்த ஃபேமிலி என்ற குறும்படத்தை சோனி டிவி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில், இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளனர்.
ஃபேமிலி என பெயரிடப்பட்டுள்ள இப்படம் 4.34 நிமிடங்கள் ஓடுகிறது. இதில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சிரஞ்சீவி, ஆலியா பட், புரோசென்ஜித் சாட்டர்ஜி, சிவ ராஜ்குமார், தில்ஜித் தோஸாஞ் என பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அமிதாப் பச்சன் தன்னுடைய கூலிங் கிளாஸ் கண்ணாடியை கண்டுபிடித்து தர வீட்டில் இருப்பவர்களிடம் கேட்கிறார். அவர் கண்ணாடியை ஒவ்வொருவரிடமும் தேடிச் செல்வது போன்றும், அதற்கு அவர்கள் பதில் அளிப்பது போன்றும் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தின் இறுதியில் அமிதாப் பச்சனிடம் பிரியங்கா சோப்ரா இப்போது எதற்காக இந்தக் கண்ணாடி எனக் கேட்கிறார். அதற்கு அமிதாப் பச்சன், நான் வெளியில் செல்லப் போவதில்லை, தொலைந்து போகாமல் இருக்கவே தேடச் சொன்னேன் என பதிலளிக்கிறார்.
இந்த குறும்படத்துக்கான விடியோ ஒவ்வொரு நடிகரின் வீட்டில் தனித்தனியாக எடுக்கப்பட்டது. நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீங்களும் வீட்டிலேயே இருங்கள். அதுதான் கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழி என்கிறார் அமிதாப் பச்சன்.
இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். இப்பொழுது ஊரடங்கு காரணமாக சினிமாத் துறையில் உள்ள தொழிலாளர்கள் வருமானமின்றி இருக்கிறார்கள். டிவி சேனல் மற்றும் பிற ஸ்பான்சர்கள் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவ இருக்கிறோம் எனவும் அந்தக் குறும்படத்தில் அமிதாப் பச்சன் கூறுகிறார்.
பிரசூன் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தக் குறும்படத்தை அந்தந்த நடிகர்கள் அவரவர் வீடுகளில் தனித்தனியாக நடித்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது போல எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
சமூக விலகலின் அவசியத்தை இந்த குறும்படம் வலியுறுத்துகிறது. யூடியூப் தளத்திலும் இந்த குறும்படம் வெளியாகியுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.