அடம் பிடிக்கும் சீனா
புதுதில்லி: இந்தியாவின் லடாக் எல்லை பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில், இந்திய எல்லையில் விரல்கள் 5 பகுதியில் இருந்து சீனப் படைகள் இன்னமும் வாபஸ் பெறவில்லை என்ற தகவல் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
பல்வேறு ஆயுதங்களுடன் ஏறக்குறைய 40 ஆயிரம் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவரும் பின்வாங்கும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை எனவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 76 பேர் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்களின் நிரந்தர இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டது.
கடந்த 14, 15 தேதிகளில் நடந்த கடைசிச் சுற்று பேச்சுவார்த்தையை அடுத்து இருதரப்பினரும் வாபஸ் பெறும் செயல்முறையை பரஸ்பரம் கண்காணிக்க ஒப்புக் கொண்டனர். இச்சூழலில் சீனப் படைகள் மோதல் ஏற்படக் கூடிய பகுதிகளில் இருந்து இன்னமும் பின்வாங்குவதற்கு தயங்கி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியாவும், சீனாவும் பரஸ்பர செயலிழப்பைத் தொடங்கிய பாங்கோங் ஏரியிலுள்ள டெப்சாங் சமவெளிப் பகுதி, கோக்ரா மற்றும் விரல்கள் பகுதியில் சீனத் துருப்புக்கள் இன்னமும் முழுமையாக வெளியேறவில்லை.
கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பங்கோங் ஏரி விரல்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி
ஆகியவற்றில் ஓரளவு படைகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், கோக்ராவில் எதிர்பார்த்தபடி அல்லது டெப்சாங் சமவெளிகளில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சீனப் படைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள விரல் 5 இலிருந்து கிழக்கு நோக்கி செல்ல அவர்கள் விரும்பவில்லை எனவும், அப்பகுதியில் அவர்கள் ஒரு கண்காணிப்பு பகுதியை அமைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பல வான்வழி தாக்குதல் ஆயுதங்கள், 40 ஆயிரம் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் இருந்து சீனா வெளியேற தயங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
You must log in to post a comment.